முதுபெரும் திராவிட இயக்கத் தலைவரும், திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98.
கடந்த பிப்ரவரி 24ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் க.அன்பழகனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆயினும் வயதின் மூப்பு காரணமாக அவர் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்து அன்பழகனின் உடல் நலம் குறித்து விசாரித்து திரும்பிச் சென்றார்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இரவு ஒரு மணியளவில் அன்பழகன் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்போலோ மருத்துவமனைக்கு நள்ளிரவில் கலங்கிய கண்களுடன் வந்த மு.க.ஸ்டாலின் அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கண்ணாடிப் பேழையில் வைத்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 43 ஆண்டுகள் தொடர்ந்து திமுக பொதுச் செயலாளராகவும் 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தமிழக அமைச்சராகவும் பேராசிரியர் க.அன்பழகன் பணியாற்றியதை நினைவு கூர்ந்துள்ளார்.
ஒருவாரத்திற்கு கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகவும், கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அன்பழகன் உடலுக்கு கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தியபின், இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேலங்காடு மயானத்தில் உடல்அடக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் அன்பழகன் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடச் சிகரம் சாய்ந்து விட்டது, இனமான இமயம் உடைந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் கைப்பட எழுதியுள்ள இரங்கல் கவிதையில், பேராசிரியர் மறைவினால் அல்லலுறும் கோடிக்கணக்கான கழகத்தினரை என்ன சொல்லி தேற்றுவது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
தமது சிறகை விரிக்க காரணமாய் இருந்தவர் அன்பழகன் என்று கூறியுள்ள ஸ்டாலின், தமக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமது வாழ்வின் பெருமையை வழங்கிய அன்பழகன் மறைவு இதயத்தை பிசைவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் மறைவால் இனி யாரிடம் ஆலோசனை கேட்பது என்று கூறியுள்ள ஸ்டாலின், அவரது அறிவொளியில் தங்கள் பயணம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.