பாரதிய ஜனதா கட்சியில் தாம் இணையவில்லை என்பதை நடிகர் சந்தானம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் இப்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

மறைந்த தோல் மருத்துவர் சேதுராமன் நடிகர் சந்தானத்திற்கு நெருங்கிய நண்பர் என்பதால், அவர் கொடுத்த ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களை கை கழுவிவிட்டு ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார்.

ஏற்கனவே நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்போது பிஸ்கோத் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சந்தானத்திடம், நீங்கள் பாஜகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறதே உண்மையா என கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதிலளித்த சந்தானம், தாம் பாஜகவில் இணையவில்லை என்றும் தாம் பாஜகவில் சேரப்போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதாகவும் விளக்கம் அளித்தார்.

மேலும், பாஜகவில் தாம் இணைவேன் என்பது பிஸ்கோத் திரைப்பட காமெடியை விட பெரிய காமெடி என சந்தானம் கலாய்த்தார்.

இதனிடையே சந்தானத்தின் இந்தப் பேட்டி பாஜக முகாமை கோபம் கொள்ளச் செய்துள்ளது.

பாஜகவில் சேருவது சந்தானத்திற்கு காமெடியாக தெரிகிறதா என்றும் கட்சியில் சேர விரும்பினால் சேருவேன் என்றும் இல்லையென்றால் இணையமாட்டேன் எனவும் பதிலளிப்பதை விடுத்து தேவையின்றி பிஸ்கோத் பட காமெடியுடன் ஒப்பிட்டது தவறு எனவும் பாஜக தரப்பில் கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே