ஐபோன் 12 புரோ : இந்தியாவை விட துபாயில் செலவு குறைவு..!!

ஐபோன் 12 புரோ விலை இந்தியாவை விட, சுமார் ரூ.35000 வரை குறைவாக உள்ளதால் வாடிக்கையாளர்கள் துபாயை நாடிவருகின்றனர்.

புத்தம் புது மாடல் ஸ்மார்ட் போன் வைத்திருந்தாலும், ஐபோனுக்கு இணையாகாது.

இன்னமும் அந்தஸ்தின் அடையாளமாகவே ஐபோன் திகழ்கிறது.

அதிலும், ஆப்பிள் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஐபோன் 12, ஐபோன் 12 புரோ ஆகியவற்றை இந்தியாவில் வரும் 23ம் தேதியில் இருந்து ஆர்டர் செய்யலாம்.

வரும் 30ம் தேதியில் இருந்து இங்கு ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும். ஐபோன் 12 மினி, ஐபோன் 12 புரோ மேக்ஸ் நவம்பர் 6ம் தேதியில் இருந்தும் ஆர்டர் செய்யலாம்; நவம்பர் 13 முதல் ஸ்டோர்களில் கிடைக்கும்.

ஆனால், சமீபத்திய விலை விவரங்களின்படி, மேற்கண்ட ஐபோன்களின் விலை, இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் உயரத்திய ஜிஎஸ்டிதான்.

மொபைல் போன்களுக்கு ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியது. மேலும், அடிப்படை சுங்கவரி 20 சதவீதம் மற்றும் 2 சதவீத செஸ் வரி செலுத்த வேண்டும்.

இதனால், 256 ஜிபி மெமரி உடைய ஐபோன் 12புரோ இந்தியாவில் 1,29,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது துபாயில் 96,732 ஆகவும், அமெரிக்காவில் 87,792 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் இதன் விலை 32,268 அதிகம்.

இதுபோல், ஐபோன் 12 புரோ மேக்ஸ் இந்தியாவில் 1,59,900 ஆகவும், துபாயில் 34,905 குறைவாக, 1,24,995 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து துபாய்க்கு சுமார் 15,000 முதல் 20,000க்குள் சென்று வரலாம். இதை விட இந்தியாவில் விலை அதிகமாக உள்ளது.

இந்திய மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறுகையில், ”கொரோனாவுக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு விட்டால், சர்வதேச போக்குவரத்து இயல்பு நிலைக்கு வரும்.

அப்போது, கள்ளச்சந்தையிலும் விற்பனை சூடுபிடிக்கும். ₹20,000க்கும் மேல் உள்ள போன்களுக்கு அடிப்படை சுங்க வரியை அதிகபட்சம் ₹4,000 என விதித்தால், மொபைல் போன் கடத்தல் குறைவதோடு; அரசுக்கு கடத்தல் மூலம் ஏற்படும் 2,000 கோடி வருவாய் இழப்பும் தவிர்க்கப்படும்.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மார்ச் வரை, 50 முதல் 60 சதவீத கடத்தல் போன்கள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளன” என்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே