செல்பிக்கு பதில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், ஐபோன்-11 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில் வருகிற 27ந் தேதி முதல் இவை விற்பனைக்கு வருகின்றன.

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் புதிய போன்களை வெளியிட்டு வருகிறது. இதையொட்டி, அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐபோன் 11, ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன்11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் அறிமுகம் செய்துவைத்தார்.

ஐபோன் 11 மாடல், 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர் டிஸ்பிளே கொண்டது. நிறம் மாறாது, அழுக்கடையாது, ஸ்கிராட்ச் ஏற்படாது என்பன போன்ற பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.

கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஐபோன் 11 மாடலின், செல்பி கேமரா 12 எம்பி தரம் கொண்டது. இதில் zoom, autoflash, face detection, touch to focus போன்ற வசதிகள் உள்ளன. ஸ்லோமோஷனில் செல்பி எடுக்கும் வசதி முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன்-11 எல்.சி.டி. ஸ்கிரீனில் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபோன் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஓடிஎல்டி ஸ்கிரீனில் வெளியாகி உள்ளன. ஐபோன்-11ல் 2 லென்ஸ்கள் உள்ள நிலையில், புரோ மற்றும் புரோ மேக்ஸ் போன்களில் 3 விதமான லென்ஸ்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் வைட், அல்ட்ரா வைட், ஜூம் போன்றவற்றில் படம் பிடிக்க முடியும்.

அமெரிக்காவில் 699 டாலர் என விலை மதிப்பிடப்பட்டுள்ள ஐபோன்-11 மாடல் இந்தியாவில் அனைத்து வரிகளையும் சேர்த்து 65 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வரி விதிப்புகளால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டைவிட 50 டாலர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் ப்ரோ வகை மாடல்கள் 99 ஆயிரத்து 900 ரூபாய்க்கும், ப்ரோ மேக்ஸ் வகை மாடல்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 900 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகிற 27ந் தேதி இந்த மாடல் போன்கள் விற்பனைக்கு வருகின்றன.

இதேபோல் தற்போது வெளியாகி உள்ள ஆப்பிள் டிவி பிளஸ் ஆர்கேட் கேமிங் சேவையுடன் 100 நாடுகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாத கட்டணம் 4.99 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறிமுகம் செய்யப்படும் ஆப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவை இலவசமாக வழங்கப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபேட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் இருமடங்கு வேகமான பிராசஸர் வழங்கப்பட்டுள்ளதுடன், புதிய ஐபேட் வாங்குவோருக்கு ஒரு வருடத்திற்கு இலவசமாக ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவை வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஐபேட் தொடக்க விலை 329 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே