பிட்ச்களா இவை? இந்திய அணிக்குப் புள்ளிகளைக் குறைக்க வேண்டும்- மைக்கேல் வான் காட்டம்

5 நாள் டெஸ்ட் என்றுதான் டிவி ஒளிபரப்பு உரிமைகளை அந்த விலைக்கு விற்கின்றனர், இப்போது 2நாட்களில் முடிந்து விட்டது, இதற்கான இழப்பீட்டை பிசிசிஐ-யிடம் ஒளிபரப்பாளர்கள் கேட்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை அப்படிக்கேட்டால்தான் இத்தகைய குண்டு குழிப்பிட்ச்களுக்கு விடிவு பிறக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு லாயக்கில்லாத பிட்ச்களை பிசிசிஐ அமைப்பதை அனுமதித்துக் கொண்டே போனால் ஐசிசி எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்லில்லாத கிழட்டு அமைப்பாகி விடுவதைத்தான் நாம் பார்ப்போம் என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஏற்கெனவே பிசிசிஐ-யின் பணபலத்துக்கு அடங்கி ஒடுங்கி செயல்படும் ஐசிசி-யை சிலர் இந்தியன் கிரிக்கெட் கவுன்சில் என்றே அழைத்துக் கேலி செய்து வருகின்றனர்.

அனைத்தையும் விடக் கொடுமை அகமதாபாத் பிட்ச் ‘பேட்டிங் பிட்ச்’ என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம் விராட் கோலி. இவராவது பரவாயில்லை முட்டுக்கொடுப்பதில் வல்லவரோ என்று கருதும் அளவுக்குப் போன அஸ்வின், ‘எது நல்ல பிட்ச்?’ என்று கூற முடியுமா என்ற அளவுக்குப் போய்விட்டார். அவர் உண்மையில் நல்ல பிட்ச் எது என்று தெரியாமல் கூறுவதாக தன்மை நவிற்சிப் பொருளில் அதை எடுத்துக் கொள்வதா அல்லது யாருக்குமே தெரியாது எனக்கும் தெரியாது என்பது போல் கூறினாரா என்பது ஆய்வுக்குரியது.

இந்நிலையில் டெய்லி டெலிகிராப் ஊடகத்துக்கு எழுதிய பத்தியில் மைக்கேல் வான் கூறியிருப்பதாவது:

இந்தியா போன்ற பணபலம் மிகுந்த கிரிக்கெட் வாரியங்களை இப்படி தொடர்ந்து அவர்கள் போக்குக்கு அனுமதித்தால் நிச்சயம் ஒருநாள் ஐசிசி பல்லில்லாத கிழட்டுத்தன்மை எய்தி விடும்.

இந்தியா என்ன செய்தாலும் சரி என்ற போக்கில் ஐசிசி செயல்படுவது சரியல்ல. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்தான் அழிக்கப்படுகிறது.

5 நாள் டெஸ்ட் என்றுதான் டிவி ஒளிபரப்பு உரிமைகளை அந்த விலைக்கு விற்கின்றனர், இப்போது 2நாட்களில் முடிந்து விட்டது, இதற்கான இழப்பீட்டை பிசிசிஐ-யிடம் ஒளிபரப்பாளர்கள் கேட்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை அப்படிக்கேட்டால்தான் இத்தகைய குண்டு குழிப்பிட்ச்களுக்கு விடிவு பிறக்கும்.

3 நாட்கள் அவர்களுக்கு டெஸ்ட் போட்டி இல்லை ஆனால் அவர்கள் தயாரிப்புக்கு பணம் கொடுக்க வேண்டும். இதனால் இனி டெஸ்ட் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைகளில் முதலீடு செய்யும் போது அவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்.

இந்திய வெற்றி இத்தகைய பிட்ச்களில் வெறும் மேம்போக்கான வெற்றிதான். யாரும் வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது. ஆனால் இந்திய வீரர்கள் திறமையைக் காட்டினர் என்பதை நான் ஏற்கத்தான் வேண்டும்.

ஆனால் ஆட்டத்தின் ஆரோக்கியம் தான் முக்கியம் அதனால்தான் முன்னாள் வீரர்களான நாங்கள் இதனை கண்டிக்க வேண்டியிருக்கிறது.

இங்கிலாந்தின் இந்த வீரர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டிருப்பவர்கள், அதற்காகவே வாழ்பவர்கள், ஆனால் இப்படிப்பட்ட பிட்ச்களினால் அவர்களைச் சுத்தமாக கைகழுவி விட்டது.

இந்தப் பிட்ச்களில் 250 ரன்கள் என்ற முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சரிசமமான ஸ்கோர் என்றும் பிட்ச் நல்ல பிட்ச் என்றும் எப்படி கூற முடிகிறது? முதல் இன்னிங்சில் பேட்ஸ்மென்கள் ரன் எடுப்பது அதிர்ஷ்டம் சார்ந்ததாக எப்படி ஒரு டெஸ்ட் போட்டியில் இருக்க முடியும்?

இப்படிப்பட்ட பிட்ச்களை போட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என்பதால் புள்ளிகளைக் குறைக்க வேண்டும். 1-0 என்று பின் தங்கியிருந்த இந்திய அணி வேண்டுமென்றே தெரிந்தே 2-3 நாட்களில் முடிவதற்காகவே பிட்ச்களை போடுகின்றனர்.

இவ்வாறு காட்டமாக பதிவிட்டுள்ளார் மைக்கேல் வான்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே