செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லுபடியாக்கிய கும்பல்…!

தெலங்கானாவில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செல்லாது போன 500, 1000 ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடித்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டுள்ளது ஒரு கும்பல்.

செல்லா காசை வைத்து எப்படி ஏமாற்றினார்கள் என்பதை பார்ப்போம்.

கட்டு கட்டாக குவிக்கப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகள். ஆனால் அத்தனையும் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள்.

அதைத்தான் வங்கிகளிடம் ஒப்படைத்து விட்டோமே இங்கே எப்படி என யோசிக்க வேண்டாம். அத்தனையும் கள்ள நோட்டுகள்.

புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை போலவே அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றுவது தானே காலம் காலமாக நடக்கும் மோசடி.

ஆனால் தெலங்கானாவில் புழக்கத்தில் இல்லாத 500, 1000 ரூபாய் போலியாக அச்சடித்துக் கொடுத்து சாமர்த்தியமாக ஏமாற்றி இருக்கிறது ஒரு கும்பல்.

தெலங்கானா மாநிலம் சத்துபள்ளி பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி கள்ளநோட்டு மாற்ற முயன்ற ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரிக்க, அவர் அளித்த தகவலின்படி கம்மம் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 7 கோடி ரூபாய்க்கான 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்தனர்.

கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேலும் 7 பேர் தலைமறைவாகி விட்டனர். அந்த ஆறு பேரிடம் நடத்திய தொடர் விசாரணையில் தான், செல்லாத ரூபாய் நோட்டுகளை அதுவும் கள்ள நோட்டுகளை செல்லுபடியாக வைத்த விஷயம் தெரிய வந்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என விரைவில் மத்திய அரசு அறிவிக்க உள்ளதாகவும், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மீண்டும் புழக்கத்திற்கு வர உள்ளதாக கூறி கள்ளநோட்டு கும்பல் சிலரை ஏமாற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருப்பு பணம் வைத்துள்ளவர்களை அணுகி, அவர்களிடம் பெரும் தொகையை 2,000 ரூபாயாக பெற்றுக் கொண்டு அவற்றிற்கு பதிலாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அளித்துள்ளனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால் ரூபாய் நோட்டுகளை மாற்ற 20 சதவிகிதம் கமிஷனையும் அந்த கும்பல் பெற்றுள்ளது.

கள்ள நோட்டு கும்பல் அளித்த 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மேலே இருந்த முதல் இரண்டு நோட்டுகள் மட்டும் உண்மையான ரூபாய் நோட்டுகளாக இருந்ததால் வாங்கியவர்கள் எளிதில் ஏமாந்து விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை அடுத்து மார்க்கபது பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே