பேருந்து கட்டணங்களை PAY TM மூலம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட இருப்பதாக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள 3 மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கன்னியாகுமரி மாவட்டத்தில், நாளை முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும், என தெரிவித்தார்.
தேவையான இடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், 55 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில், 32 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டாலும், பயண கட்டணம் உயர்த்தப்படாது எனவும் குறிப்பிட்டார்.
அரசுப் பேருந்துகளில் PAY TM மூலமாக கட்டணம் வசூலிக்கும் முறை, சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படவில்லை என கூறிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலைக்கு வராதவர்களுக்கும், தொடர்ந்து வேலை செய்தவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சரிசெய்துள்ளதாக தெரிவித்தார்.