மதச்சார்பின்மை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்படுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்டாலின், தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, திமுகவுடனான தொகுதிப் பங்கீடு மகிழ்ச்சியும், நிறைவையும் அளிக்கிறது.

பாரதிய ஜனதாவிற்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே தான். மதச்சார்பின்மை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்படுவேன்.

குறைவான தொகுதிகள் குறித்து கருத்து தெரிவித்த போது அரசியலில் ஏற்ற இறக்கங்கள் என்பது இயல்பானது.

எண்ணிக்கையை வைத்து இயக்கத்தை எடைப்போடக் கூடாது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறினார்.

சமூகநீதிக்கு எதிராக இருக்கும் சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு. வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம் எனவும் கே.எஸ்.அழகிரி கூறினார்.

முன்னதாக நாம் கேட்கும் தொகுதிகள் எண்ணிக்கைக்கு மிகவும் குறைவான தொகுதிகளை திமுக கொடுக்க முன்வருவதாக நிர்வாகிகள் கூட்டத்தில் கே. எஸ்.அழகிரி கண்ணீர் சிந்தியதாக தகவல் பரவியது.

இதனால் கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே