தேர்தல் வெற்றிக்காக நூதன பிரார்த்தனை; திருத்தணி முருகன் கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச் சென்ற திமுகவினர்

திருத்தணி தொகுதியில் திமுக வெற்றி பெறுவதற்காக அக்கட்சியினர், திருத்தணி முருகன் கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச் சென்று, பிரார்த்தனை செய்தனர்.

திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக-அதிமுக கட்சிகள் நேரடியாகப் போட்டியிடுகின்றன. இத்தொகுதியில் கடும் போட்டி நிலவுவதால், திமுக வேட்பாளர் எஸ்.சந்திரன், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தொகுதி முழுவதும் சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், திருத்தணி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டி, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் படிக்கட்டுகளி்ல் முட்டிபோட்டு ஏறிச் சென்று, திமுகவினர் வழிபாடு நடத்தினர்.

ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள பாலாபுரம் திமுக கிளைச் செயலர் சந்திரசேகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் நேற்று மலையடிவாரத்திலிருந்து, மலை மீது உள்ள கோயில் வரை செல்லும் 365 படிகளிலும் முட்டிபோட்டு ஏறிச் சென்றனர். பின்னர், திருத்தணி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமென முருகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே