வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வர இயலாது – மத்திய அரசு

இந்திய மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர தற்போது நடவடிக்கை எடுக்க இயலாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றன.

இதன் காரணமாக உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகளை பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், மலேசியாவில் சிக்கியுள்ள 350 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பாக வழக்கறிஞர் ஞானசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய வெளியுறவுத்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைபிடித்து வரும் சூழலில், உள் நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனுமதித்தால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகிவிடும் என தெரிவித்துள்ள மத்திய அரசு, ஊரடங்கு சமயத்தில் வெளிநாட்டில் தங்கி உள்ளவர்களை இந்தியா கொண்டு வருவது தற்போதைக்கு சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே