வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்

கொரோனா முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் விமான சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து முடங்கியதால் ஊரடங்கிற்கு முன்பாக வெவ்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் தாயகம் அழைத்து வர மத்திய அரசு முடிவு எடுத்தது.

அதன்படி அபுதாபியிலிருந்து இயக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் மூலம் முதற்கட்டமாக நேற்றிரவு 363 இந்தியர்கள் கேரளாவை வந்தடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று துபாயில் இருந்து தலா 200 பயணிகளுடன் புறப்படும் இரண்டு விமானங்களில் ஒன்று இரவு ஒன்பது பத்து மணியளவிலும் மற்றொரு விமானம் நள்ளிரவு 12 55 மணிக்கும் சென்னையை வந்தடைய உள்ளன.

இதே போன்று நேற்று இரவு ஒரே ஒரு பயணியுடன் டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானம் 243 இந்தியர்களுடன் இன்று காலை 11 30 மணியளவில் டெல்லிக்கு திரும்புகிறது.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் ஒரு மணியளவில் வங்கதேசத்தின் டாக்காவில் இருந்து புறப்படும் மற்றொரு விமானத்தின் மூலம் 167 பயணிகள் டெல்லியை வந்தடைந்துள்ளனர்.

இதற்கிடையே மாலத்தீவில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக சென்றுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஜலஷ்வா மற்றும் மகர் கப்பல்கள் மூலமும் முதற்கட்டமாக ஆயிரம் பேர் தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர்.

தொடர்ந்து தாயகம் அழைத்து வரப்படும் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே