நேற்று நள்ளிரவு மீண்டும் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதால், மேலும் 3 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரசாயன ஆலையில் இருந்து வெளியாகும் ஒரு சிறிய வாயுக் கசிவு காற்றில் கலந்தால், மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என உறியடி 2 படத்தில் இடம்பெற்றுள்ளது.
இதைப்போலவே, ஆந்திர மாநிலத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில், எல்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த ஆலையில் பணியாளர்கள் வேலைக்கு வராமல் இருந்ததால், ஆலையை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் அவசர அவசரமாக நடைபெற்று வந்துள்ளன.
இந்நிலையில், திடீரென ரசாயன வாயு கசிந்து வெளியேறியுள்ளது.
ரசாயன வாயு காற்றில் கலந்ததால், சுற்றுவட்டார கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
மேலும், கால்நடைகளும் வாயில் நுரைதள்ளி உயிரிழந்தன. காரணம் தெரியாமல், அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள், ஆங்காங்கே மயங்கி விழுந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர். பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
வாயுக் கசிவு சுற்றுவட்டார கிராமங்களுக்கும் பரவியதால், சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதில் ஏராளமான சிறுவர்களும், முதியவர்களும் மயக்கமடைந்ததால், பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, 5 கிலோ மீட்டருக்கு சுற்றளவில் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பான இடங்களில் இருப்பவர்களும், ஈரமான துணியை முகக்கவசமாக பயன்படுத்துமாறும், ஏசிகளை இயக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வாயுக்கசிவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.