இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா 83 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்த குப்தா, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
2001ஆம் ஆண்டு ஏஐடியுசி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுமார் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
1985 முதல் 200 வரை மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
2004 முதல் 2014 வரை இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்வானார்.
2004ஆம் ஆண்டு 14வது மக்களவைப் பொதுத்தேர்தலில் பன்ஸ்கரா தொகுதியில் இருந்தும், 2009ஆம் ஆண்டு 14வது மக்களவைப் பொதுத்தேர்தலில் கட்டல் தொகுதியில் இருந்தும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் விசாரணைக் குழுவின் உறுப்பினராக இருந்தபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தனது கடமையிலிருந்து வழுவியதாக குற்றம்சாட்டினார்.
பிரதமர் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த தவறுகள் பற்றி முழுக்க அறிந்திருந்தார் என்றும் கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பவானிபூரில் வசித்த குருதாஸ், கடந்த சில மாதங்களாகவே இதயம் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்பட்ட குறைபாட்டினாலும் வயயோதிக நோய்களாலும் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார்.
இச்சூழலில் இன்று வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காமல் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் காலமானார். குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.