வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 388 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேற்கு இந்திய தீவுகளுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், கே.எல். ராகுலும் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் கே.எல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ரோகித் அவருக்கு உறுதுணையாக விளையாடினார்.

பின்னர் ராகுலுடன் இணைந்து ரோகித்தும் அதிரடியை காட்ட, இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

ரோகித் சர்மா 107 பந்துகளில் சதமடிக்க, அவரைத் தொடர்ந்து ராகுலும் 102 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்த நிலையில், ராகுல் 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலியும் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா 159 ரன்களில் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

அதன் பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ரோகித் விட்டு சென்ற அதிரடியை தொடர்ந்தனர்.

ஆக்ரோஷத்துடன் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களிலும் பண்ட் 39 ரன்களிலும் வெளியேறினர்.

50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்களை குவித்தது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், மேற்கு இந்திய தீவுகள் அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்த இமாலய இலக்கை எட்டிப்பிடிக்குமா?? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே