பொருளாதார மந்தநிலையால் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது: மன்மோகன் சிங்

பொருளாதார மந்த நிலைக்கு தீர்வு காண்பதில் அரசு காட்டும் அலட்சியத்தால் இந்தியர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வணிகச் சூழல் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், குறிப்பாக தொழில் மாநிலமான மகாராஷ்டிராவில் பல ஆலைகள் மூடப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மூடப்பட்ட ஆலைகள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருப்பதாக கூறிய மன்மோகன் சிங், தங்கள் பலவீனத்தை மறைக்க எதிர் கட்சியினர் மீது பழி போடுவதை அரசு வழக்கமாக கொண்டிருப்பதாகவும் சாடினார்.

தேசபக்தி விஷயத்தில் காங்கிரசுக்கு ஆர்எஸ்எஸ்-ம், பாஜக-வும் சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறிய மன்மோகன் சிங், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளால் அனைத்தையும் சாதிக்க அரசு நினைக்க கூடாது எனவும் விமர்சித்தார்.

ப.சிதம்பரம், டி.சிவகுமார், ரபேல் பட்டேல் ஆகியோர் மீது அமலாக்கத் துறை மற்றும் சிவில் வழக்குகள் நடைபெறுவதை மறைமுகமாக சுட்டிக்காட்டி மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே