இந்தியாவில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாநில அரசுகள் கடுமையான முறையில் ஊரடங்கை விதித்திருந்தன.
இந்த சூழலில் இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கனடா ரத்து செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த தடை அமலுக்கு வந்தது.
இந்தியாவில் கொரோனா குறைந்ததால், அண்மைக்காலமாக விமான தடையை ரத்து செய்து நேரடி விமான போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் போக்குவரத்து தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
விமான தடை காரணமாக, கனடாவிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்தியர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். இணைப்பு விமானங்கள் மூலம் துபாய், ஸ்பெயின், மெக்சிகோ ஆகிய 3 நாடுகளை கடந்து செல்லும் நிலை உள்ளது. அத்துடன், 3வது நாட்டில் கொரோனா பரிசோதனையை செய்ய வேண்டும். ரூ.1.5 லட்சத்தில் முடிய வேண்டிய பயண செலவு, ரூ.5 லட்சத்திற்கும் மேல் ஆனது.
இந்நிலையில், நாளை(செப்.27) முதல் இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களை அனுமதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கும் மேலாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள கனடா போக்குவரத்து துறை, பயணிகள் புறப்பட திட்டமிட்ட 18 மணி நேரத்திற்குள், டெல்லி விமான நிலையத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஜெனஸ்ட்ரிங்ஸ் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.
கனடாவின் இந்த முடிவை இந்திய தூதர் அஜய் பிசாரியா வரவேற்றுள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை என்று அவர் கூறி உள்ளார். ஏர் இந்தியா மற்றும் ஏர் கனடா நிறுவனங்கள் செப்டம்பர் 27 முதல், டெல்லி மற்றும் டொரன்டோ/வான்கூவர் இடையே தினசரி விமானங்களை இயக்க உள்ளன, பயணத்தை மேலும் எளிதாக்க கனடா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்றும் அஜய் பிசாரியா குறிப்பிட்டுள்ளார்.