வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கிய நிலையில் டெல்லி- மீரட் வரை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சட்டங்களை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் முதல் 10 மாதங்களாக பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் கார்பரேட் நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டும் என்பது விவசாயிகளின் வாதமாக உள்ளது.
ஆனால் மத்திய அரசோ இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு பலன்கள் உள்ளன. அவர்களது வருமானத்தை அவர்கள் பெருக்கிக் கொள்ள முடியும் என்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி இந்த 3 வேளாண் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இன்றுடன் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு ஆகிறது.
நாடு தழுவிய போராட்டம்
இதை எதிர்க்கும் வகையில் நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆங்காங்கே விவசாயிகள் மறியல் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை முடக்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லியில் 40 க்கும் மேற்பட்ட யூனியன்கள்
10 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தில் டெல்லியில் 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றன. டெல்லி- மீரட் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்தானது ஸ்தம்பித்துள்ளது. அனைத்து வழிகளையும் மறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகள் போராட்டம்
அது போல் உத்தரப்பிரதேசத்திலிருந்து காசியாபூர் செல்லும் வழிகளையும் மறித்து விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. அது போல் பஞ்சாப்- ஹரியானா எல்லையில் உள்ள சாம்பு எல்லையையும் டெல்லி- அமிருதசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் ஷாஹாபாத் எல்லையையும் மறித்து போராட்டம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கலந்து கொண்டுள்ள. தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் காலை 11 மணிக்கு பேரணியையும் விவசாயிகள் நடத்துகிறார்கள். தமிழகம், சத்தீஸ்கர், கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் அரசுகள் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.