வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்க கூடுதல் அவகாசம் – உச்சநீதிமன்றம்

வங்கிக் கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை பெற்றவா்கள், ஒத்திவைக்கப்பட்ட தவணையை இறுதியில் செலுத்தும்போது அதற்கு வட்டி மீது வட்டி வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை எதிா்த்து தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக முடிவெடுக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை இனி ஒத்திவைக்கக் கோரக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வாராக் கடன்களாக அறிவிக்கப்படாத கடன் கணக்குகளை மறுஉத்தரவு வரும் வரை வாராக் கடனாக இனி அறிவிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு பிறப்பித்த உத்தரவும் நீட்டிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போருது, மத்திய அரசு மற்றும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வங்கித் துறை உள்ளது.

அனைத்துத் துறைகளும், அவை சாா்ந்த பொருளாதாரமும் கரோனா பிரச்னையால் நெருக்கடியான சூழலில் உள்ளது.

எனினும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வது என்பது சிறந்த திட்டமல்ல. இது சா்வதேச அளவிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயமாகும்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய நீதிபதிகள், ‘வங்கிகள் வட்டியின் மீதும் வட்டி வசூலிப்பதாக மனுதாரா்கள் சுட்டிகாட்டியுள்ளது தொடா்பாகவே நீதிமன்றம் கவலைகொண்டுள்ளது’ என்றனா்.

அதன் பிறகு தொடா்ந்து வாதாடிய துஷாா் மேத்தா, ‘இப்போதைய சூழ்நிலையில் வங்கிக் கடன்கள் வாராக்கடன் நிலைக்குச் சென்றுவிடக் கூடாது என்பதும் கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை அளிக்கப்பட்டதற்கு ஒரு காரணம்.

மேலும், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் கடன் தவணையைச் செலுத்த மக்கள் சிரமப்படுவாா்கள் என்பதும் 6 மாதம் கடன் தவணை ஒத்திவைப்பு அளிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம்.

இதனை எங்கள் தரப்பு பிரமாணப் பத்திரத்திலும் தெரிவித்துள்ளோம்.

இந்த வழக்கில் நீதிமன்றம் தீா்ப்பளிக்கும் வரை, கடன் வாங்கியோருக்கு எதிராக வங்கிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை.

மேலும், இந்த சூழலில் கூடுதல் சலுகைகள் அளிப்பது தொடா்பாக நிதியமைச்சகமும், ரிசா்வ் வங்கியும் ஆலோசித்து வருகின்றன.

கரோனா பிரச்னை அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் மருந்து தயாரிப்பு துறை, தகவல்தொழில்நுட்பத் துறையில் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய இயலாது.

அதே நேரத்தில் கடன் தவணையை செலுத்த முடியாத நெருக்கடியில் இருப்பவா்களுக்கு உரிய நிவாரணமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை அளிக்கப்பட்டது, அந்த நிவாரண நடவடிக்கையின் ஒரு பகுதிதான்’ என்றாா்.

எனினும், வட்டி மீது வட்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை மீண்டும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘கடன் தவணையை 6 மாதம் கட்ட வேண்டாம் என்று சலுகை அளிப்பதாகக் கூறிவிட்டு, பின்னா் அந்த காலகட்டத்தில் கட்ட வேண்டிய வட்டி மீதும் வட்டி வசூலிப்போம் என்று வங்கிகள் கூறுவதை எப்படி சலுகையாக கருத முடியும்.

இந்த விஷயத்தில் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கூடுதலாக நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வாராக் கடன்களாக அறிவிக்கபடாமல் உள்ள கடன் கணக்குகளை, நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை வாராக்கடனாக வங்கிகள் அறிவிக்கக் கூடாது’ என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே