கடந்த வாரம் சென்னையில் பெய்த கனமழைக்குப் பிறகு தன் வீட்டு ஏசியில் துர்நாற்றம் வீசுகிறது என்று 65 வயது நபர் அதைச் சுத்தம் செய்ய முயன்றிருக்கிறார்.
ஏசியின் உள்ளே செத்த எலி இருந்ததை எடுத்து வெளியே வீசியவர், மீண்டும் கையை உள்ளே விட்டு சுத்தம் செய்திருக்கிறார். உள்ளே இருக்கும் ஒயரைத் துடைப்பதாக நினைத்து உள்ளே பதுங்கியிருந்த நல்ல பாம்பின் மீது கைகளை வைத்துவிட்டார். அவ்வளவுதான், தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் அந்தப் பாம்பு, அந்த முதியவரின் கைகளைக் கொத்திவிட்டது.
தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் அந்த முதியவர். மழை, குளிர்காலங்களில் இதுபோன்று விஷ ஜந்துகள், ஊர்வன வகையைச் சேர்ந்த பிராணிகள் வீட்டுக்குள் நுழைந்துவிடலாம். அதுபோன்ற நேரங்களை எப்படிக் கையாள வேண்டும் என்று வழிகாட்டுகிறார் அவசரகால சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தர்.Rain
“அதிக மழை பெய்யும்போது அந்த நீரானது பூமியின் மூன்றாம், நான்காம் அடுக்குகள் வரை செல்வதால் உள்ளிருக்கும் பாம்புகள், ஊர்வன ஆகியவை வெளியே வந்துவிடுகின்றன. மேலும் பல இடங்களில் கழிவுநீரும் நல்ல நீரும் கலந்துவிடுவதாலும் அவற்றின் மூலமும் அவை வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. சென்னையில் இந்த ஒரு வார காலத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு குறைந்தது ஒரு நோயாளியாவது சிகிச்சை பெற்றிருப்பார்.
4 வகை பாம்புகள்
பொதுவாக மனிதர்களைத் தாக்குபவற்றில் நல்ல பாம்பு, கட்டுவிரியன் (Common crait), கண்ணாடி விரியன் (Russell’s viper) மற்றும் சுருட்டை விரியன் (Saw scaled viper) ஆகிய 4 வகைதான் விஷமுள்ளவை.
ஒவ்வொரு வகை பாம்பின் தன்மையிலும், விஷத்தன்மையிலும் வேறுபாடு இருக்கும். இவைதான் நகர்ப்புறங்களிலும் ஊர்ப்புறங்களிலும் அதிகம் காணப்படுகின்றன. இவற்றால் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும். நல்ல பாம்பு
பாதிப்பு 4 நிலை
பாம்பு கடித்ததன் தீவிரம் நான்கு கிரேடுகளாக பிரிக்கப்படும். முதல் நிலையில் பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி சற்று வீக்கம் மட்டுமே காணப்படும். அப்படியென்றால் விஷம் ஏறவில்லை. பாம்பின் பல் மட்டுமே பட்டிருக்கிறது. அடுத்தடுத்த நிலையில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். எந்த நிலை பாதிப்பு என்பதற்கேற்ப மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படும். பாம்பு கடித்த தடம், ரத்தக்கசிவு மற்றும் ரத்த உறைவுக்கு ஆகும் நேரம் ஆகியவற்றை ஆய்வகத்தில் பரிசோதிப்பதன் மூலம் அது எந்த வகையான பாம்பு என்பதைக் கண்டறிந்துவிட முடியும்.
சாதாரண மனிதனுக்கு 8-10 விநாடிகள் முதல் அதிகபட்சம் 14 விநாடிகளுக்குள் ரத்தக்கசிவு குறைய ஆரம்பித்துவிடும். ரத்த உறைவு குறைபாடுள்ளவர்களுக்கு இது பொருந்தாது. பாம்பு கடித்தவர்களுக்கு ரத்தம் உறையாது. ஒருவருக்கு பாம்பு கடித்து சில விநாடிகளில் ரத்தம் உறையவில்லை என்றால் அது விஷமுள்ள பாம்புதான் என்ற முடிவுக்கு வரலாம். விஷப்பாம்பு கடித்தவர்களுக்கு மருத்துவமனையில் விஷத்தை முறிப்பதற்கான ஊசி (Anti snake venom) செலுத்தப்படும். அதன் மூலம் பாம்பு கடித்த தீவிரம் 24 முதல் 48 மணி நேரத்துக்குள் சரியாகிவிடும்.Emergency consultant Dr.Sai Surendar
விஷமில்லா பாம்பு கடித்தால்…
விஷமில்லா பாம்பு கடித்தால் அந்த இடத்தில் சிறிய வலி இருக்கும். தாங்கக்கூடிய அளவில்தான் இருக்கும். சிலருக்கு அந்த இடத்தில் சற்று வீக்கம் அல்லது சிவந்து போதல் போன்றவை ஏற்படும். நோயாளிகளை சில மணி நேரம் கண்காணிப்பில் வைத்திருந்து அனுப்பிடுவோம். கடித்த இடத்தில் மருந்து போடப்படும். வீக்கம், சிவந்து இருப்பதற்கு ஒத்தடம் கொடுக்கப் பரிந்துரைக்கப்படும். சிறிய தண்ணீர் பாம்பு கடித்தால்கூட அப்படியே விட்டுவிடக்கூடாது. மருத்துவமனைக்குச் சென்று அது விஷமில்லாத பாம்புதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தேள் கடி
தேள் கடியும் பாம்புக் கடியைப் போன்று விஷமுள்ளதுதான். தேள் கடியால் ஏற்படும் வலியும் தீவிரமாக இருக்கும். அதன் விஷத்தால் ஏற்படும் தாக்கம் இதயம், மூளையை நேரடியாக பாதிக்கும் என்பதால் தக்க சமயத்தில் சிகிச்சையளிக்காவிட்டால் உயிரிழப்பு கூட நிகழலாம். ஆனால் தேள்கடிக்கு சிறப்பாகச் செயலாற்றும் மருந்து உள்ளது. கொடுத்த உடனேயே செயலாற்றத் தொடங்கும்.தேள்
Golden Hour
பாம்பு, தேள் கடித்ததும் அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதைத்தான் `கோல்டன் ஹவர்’ என்பார்கள். `கோல்டன் ஹவர்’ தாண்டிவிட்டால் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்துதான். விஷமுள்ள பாம்பு கடித்து சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கவில்லை என்றால் 24 மணி நேரத்துக்குள் அந்த நபர் உயிரிழந்துவிடுவார். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்.
ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அந்த நபரின் ரத்தம் தண்ணீர் போன்று மாறிவிடும். அதன்பிறகு இதயத்தால் இயங்க முடியாத நிலை ஏற்படும். ரத்த அழுத்தம் குறையத் தொடங்கும், உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கத் தொடங்கி மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்துவிடுவார்கள். பாம்பு கடித்த தடத்தை வைத்து அது விஷமுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிவது சிரமம். எனவே, பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக அருகிலுள்ள அவசர சிகிச்சை வசதியுள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.
பூரான்
பூரான் கடித்தால் அந்த இடத்தில் வலி மட்டும் இருக்கும். வலியானது நரம்பில் ஏற்படுவது போன்று (Neurogenic) இருக்கும். அவசர சிகிச்சையில் அந்த வலியை மரத்துப் போகச் செய்யும் சிகிச்சையளிக்கப்படும். அதன் பிறகு 6 மணி நேரத்துக்கு வலி தெரியாது. அதனைத் தொடர்ந்து வலி நிவாரணிகள் மூலம் வலியை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.பூரான்
தவறுகள்
பொதுமக்களுக்கு விஷமுள்ளது விஷமில்லாதது எது என்ற தெளிவு இருக்காது. சில நேரங்களில் விஷப் பாம்பு கடித்தால்கூட அது விஷமில்லாததாக இருக்கும் என்று நினைத்து கடித்த இடத்தில் ஐஸ்கட்டி வைப்பது, ஒத்தடம் கொடுப்பது போன்ற செயல்களைச் செய்வார்கள். இதனால் முக்கியமான கோல்டன் ஹவரைத் தவறவிட்டுவிடுவார்கள். ஒரு மணி நேரம் கழித்து பாதிப்பு தீவிரமாகத் தொடங்கியதும்தான் மருத்துவமனைக்கு அழைத்து வருவார்கள்.
அந்த நேரத்தில் என்ன சிகிச்சை கொடுத்தாலும் உயிரைக் காப்பாற்றுவது சிரமமாகிவிடும். பாம்பு போன்ற விஷ ஜந்துகளை வைத்து விளையாடுவது, அதனைச் சீண்டிப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதனால் அவை எதிர்வினையாற்றி தாக்கிவிடும்.
முதலுதவி
பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் கடித்தால் அந்த இடத்தை ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அந்த இடத்தை அழுத்தி அல்லது கடித்துத் துப்பி விஷத்தை வெளியேற்றுவது போன்ற தவறான செயல்களைச் செய்யக்கூடாது. கடிபட்ட இடத்துக்கு மேலும் கீழும் ஒரு துணியைக் கட்ட வேண்டும். துணியை அதிக இறுக்கமாகக் கட்டக்கூடாது. குறைந்தபட்சம் 1 செ.மீ இடைவெளி இருக்கும் வகையில் கட்ட வேண்டும். அதிக இறுக்கமாகக் கட்டினால் ரத்த ஓட்டமே பாதிக்கப்பட்டுவிடும். துணியைக் கட்டியபிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும்.Snake
என்ன செய்ய வேண்டும்?
மழைக்காலங்களில் நாள்தோறும் வீட்டு வளாகத்தில் ஏதேனும் விஷ ஜந்துகள் உள்ளனவா என்று பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக மழை பெய்து தண்ணீர் வடிந்துவிட்டது என்றால் வளாகம் முழுவதையும் பரிசோதிக்க வேண்டும். வெற்று இடத்தில் மட்டும் பரிசோதிக்காமல் அங்குள்ள பொருள்கள், வாகனங்கள் அருகில், சந்து, இடுக்கு என அனைத்துப் பகுதிகளையும் பரிசோதிக்க வேண்டும்.
ஏதாவது விஷ ஜந்துகள் தங்கியிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவு நீர் வெளியேறும் பாதை வழியாக கழிவறைக்குள் நுழையும் வாய்ப்புள்ளது. பாம்பு அடுக்குமாடி ஏறாது, சுவற்றில் ஏறாது என்பதெல்லாம் தவறு. புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக அதனால் இயங்க முடியும். அவை இருப்பதைக் கண்டறிந்தால் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
மழைக்காலங்களில் கழிவறையை உபயோகிக்கும் முன்பு கழிவறையின் உள்பகுதி, வெளிப்பகுதியையும் நன்றாகப் பரிசோதிக்க வேண்டும். பரிசோதிப்பதற்கு முன்போ, இருட்டில் லைட் போடாமலோ கழிவறையைப் பயன்படுத்தக்கூடாது. சிறு குழந்தைகள், வெளியே விளையாடச் செல்லும் குழந்தைகள் அதிக நேரம் அழுதுகொண்டே இருந்தால் அவர்கள் உடலில் எங்காவது ஏதாவது கடித்தது போன்ற தடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்” என்றார் அவர்.