நரசிம்ம ராவ் மனம் வைத்திருந்தால் பாபர் மசூதி இடிக்கப்படாமல் தப்பித்திருக்குமா?

1992 டிசம்பர் ஆறாம் தேதி காலை ஏழு மணிக்கு துயிலெழுந்தார் நரசிம்ம ராவ். பொதுவாக அதிகாலையிலேயே எழுந்திருக்கும் வழக்கமுள்ள அவர், ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக எழுந்திருந்தார். செய்தித்தாள்களை படித்த பிறகு, டிரெட் மில்லில் அரைமணி நேரம் பயிற்சி செய்தார்.

தன்னை பார்க்க வந்த மருத்துவர் கே.ஸ்ரீநாத் ரெட்டியுடன் தாய்மொழியான தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார் பிரதமர். வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

பிரதமர் நரசிம்ம ராவுக்கு இதயத்தில் சிறிது பிரச்சனை ஏற்பட்டு 1990ஆம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, அரசியலில் இருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விஷயம்.

தனது வீட்டிற்கு சென்ற டாக்டர் ஸ்ரீநாத் நண்பகல் 12 மணிவாக்கில் தொலைகாட்சியை பார்த்தார். ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் பாபர் மசூதியின் உச்சிமுகட்டில் ஏறிக்கொண்டிருந்த காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததை பார்த்த அவர் இடிந்துபோனார்.

மதியம் 1.55 மணிக்கு மசூதியின் ஒரு கூம்பு கீழே விழுந்தது. இதயநோயாளியான் நரசிம்ம ராவ் இதுபோன்ற அதிர்ச்சி தரும் நிகழ்ச்சியைப் பார்த்தால் அவர் நிலை என்னவாகும் என்று கவலைப்பட்டார் மருத்துவர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்

மருத்துவர் ஸ்ரீநாத் கூறும் சுவராசியமான தகவல்கள்

உடனே பிரதமரின் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும் என்று பிரதமரின் வீட்டிற்கு விரைந்தார் ஸ்ரீநாத். அப்போது, மசூதியின் மூன்றாவது கூம்பு இடிக்கப்பட்டிருந்தது.

”என்னை பார்த்ததும் மீண்டும் ஏன் வந்தீர்கள் என்று கடிந்துக்கொண்டார் நரசிம்ம ராவ். உங்களை மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லி மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றேன். அஞ்சியதுபோலவே அவரது இதய துடிப்பு தாறுமாறாய் இருந்ததுடன், ரத்த அழுத்தமும், நாடித்துடிப்பும் அதிகரித்திருந்தது.” என்று டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி சொல்கிறார்.

”ரத்த அழுத்தத்திற்கான மாத்திரையின் வீரியத்தை அதிகரித்துக் கொடுத்த நான், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும்தான் அங்கிருந்து கிளம்பினேன்.”

”அவரது உடலைப் பரிசோதித்தபோது, பாபர் மசூதி இடிப்பினால் அவர் இடிந்து போய்விடவில்லை என்று உறுதி செய்துக்கொண்டேன். மனிதர்களின் வாய் வேண்டுமானாலும் பொய் சொல்லலாம் ஆனால் உள்ளுறுப்புகள் பொய் சொல்லாது.” என்கிறார்.

அர்ஜுன் சிங்கின் சுயசரிதை

அமைச்சரவை கூட்டத்தில் மெளனமாக இருந்த நரசிம்ம ராவ்

இதன்பிறகு பிரதமர் நரசிம்ம ராவ், தன்னுடைய அறையில் இருந்து வெளியே வரவில்லை, மாலை ஆறு மணிக்கு, தனது இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார் பிரதமர்.

நரசிம்ம ராவ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மாகன்லால் ஃபோதேதார்

காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் சிங் எழுதிய ‘In the grain of sand in the hourglass of time’ சுயசரிதையில் இவ்வாறு கூறுகிறார், “அமைச்சரவை கூட்டத்தில் நரசிம்ம ராவ் வாயையே திறக்கவில்லை. அனைவரின் கவனமும் ஜாஃபர் ஷரீஃப்பை நோக்கியே குவிந்திருந்தது”.

“இந்த சம்பவத்திற்காக, நம் நாடு, அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஜாஃபர் ஷரீஃப் கூறினார். மாகன்லால் ஃபோதேதார் அந்த சமயத்திலேயே அழத் தொடங்கிவிட்டார், ஆனால் பிரதமரோ புத்தரைப் போன்று நிச்சலனமாக இருந்தார்.”

ஒரு கோபுரத்தையாவது காப்பாற்றலாம் என்று இறைஞ்சிய ஃபோதேதார்

பாபர் மசூதி இடிக்கப்படும்போது, நரசிம்ம ராவை தொலைபேசியில் அழைத்த மத்திய அமைச்சர் மாகன்லால் ஃபோதேதார், உடனடியாக எதாவது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் ஷர்மா

‘The Chinar Leaves’ என்ற தனது சுயசரிதையில் மாகன்லால் ஃபோதேதார் இவ்வாறு குறிப்பிடுகிறார், “இந்திய வான்படையிடம் சொல்லி, ஃபைஜாபாதில் இருக்கும் சேதக் ஹெலிகாப்டர்களின் மூலம் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று பிரதமரிடம் சொன்னேன்”.

“‘நான் எப்படி இதை செய்ய முடியும்?’ என்று பிரதமர் எதிர்கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் அதிகாரத்தையும், வலிமையையும் பயன்படுத்தவேண்டும் என்று கூறிய நான், குறைந்தபட்சம் ஒரு கோபுரத்தையாவது காப்பாற்றுங்கள் ராவ் சாஹப் என்று இறைஞ்சினேன்.”

“குறைந்தபட்சம் ஒரு கோபுரத்தையாவது பாதுகாக்க முடிந்திருந்தால், பாபர் மசூதியை பாதுகாக்க எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டோம் என்று சொல்வதற்காவது அது பயன்பட்டிருக்கும் என கூறினேன். என்னுடைய கோரிக்கையை அமைதியாக கேட்ட பிரதமர், நீண்ட பெருமூச்சுடன் சொன்னார், ‘ஃபோதேதார் ஜி, நான் உங்களுடன் பிறகு பேசுகிறேன்’.” என ஃபோதேதார் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையைப்போல் அழுத குடியரசுத் தலைவர் சங்கர் தயால் ஷர்மா

ஃபோதேதார் இதையும் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார், “பிரதமர் செயல்படாமல் இருந்ததைக் கண்டு எனக்கு மிகவும் ஏமாற்றம் ஏற்பட்டது, வருத்தப்பட்டேன். குடியரசுத் தலைவர் சங்கர் தயால் ஷர்மாவை சந்திக்க நேரம் கேட்டேன். மாலை 5.30 மணியளவில் சந்திக்கலாம் என்று அவர் நேரம் ஒதுக்கினார், ஆனால் ஆறு மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாக பிரதமரிடம் இருந்து தகவல் கிடைத்தது”.

“குடியரசுத் தலைவரை நான் சந்தித்தபோது, அவர் குழந்தையைப் போல் அழுதுவிட்டார். ‘பி.வி. என்ன செய்துவிட்டார் பார்த்தாயா?’ என்று கேட்டார். வானொலி மற்றும் தொலைகாட்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றுங்கள் என்று குடியரசுத் தலைவரிடம் கேட்டுக்கொண்டேன்”.

“இது குறித்து அவர் அதிகாரிகளிடம் பேசியபோது, பிரதமரிடம் அனுமதி வாங்கவேண்டும் என்றும், பிரதமர் இதற்கு அனுமதி வழங்குவாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்றும் கூறிவிட்டனர்.”

பிரதமர் நரசிம்ம ராவுக்கு நேரடி பொறுப்பு

ஃபோதேதார் பிறகு அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்துக்கொண்டார், அவர் கூறுகிறார், “15 அல்லது 20 நிமிடம் தாமதமாக அமைச்சரவைக் கூட்டத்திற்கு சென்றேன். அங்கிருந்த அனைவரும் பேசாமடந்தைகளாக இருப்பதைப் பார்த்து, ‘ஏன் அனைவரும் வாயடைத்துப் போயிருக்கிறீர்கள் என்று கேட்டேன்”

”ஃபோதேதார் ஜி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட விஷயம் உங்களுக்கு தெரியாதா?” என்று மாதவ்ராவ் சிந்தியா என்னிடம் கேட்டார்.

“நான் பிரதமரைப் பார்த்து ‘ராவ் சாஹப், இது உண்மையா? என்று கேட்டேன். அவரால் என் கண்களை பார்த்து பேசமுடியவில்லை. அவருக்கு பதிலாக அமைச்சரவை சகாக்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது உண்மைதான் என்று கூறினார்கள்”.

“‘ராவ் சாஹப், இன்று நடந்த விஷயத்திற்கு நீங்கள்தான் நேரடியாக பொறுப்பேற்கவேண்டும்’ என்று நான் அமைச்சரவைக் கூட்டத்தில் அனைவரின் முன்பும் தைரியமாக சொன்னேன், அதற்கு பிரதமர் வாயிலிருந்து ஒரு வார்த்தைக்கூட வெளிவரவில்லை.”

மசூதி இடிக்கப்பட்டபோது பிரதமர் பூசை செய்துக் கொண்டிருந்தார்

‘Beyond the Lines’ என்ற தனது சுயசரிதையில் குல்தீப் நய்யர் இவ்வாறு கூறுகிறார். “பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் நரசிம்ம ராவுக்கு முக்கியமான பங்கிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. கரசேவகர்கள் மசூதியை இடித்துக் கொண்டிருந்தபோது, ராவ் தனது இல்லத்தில் பூஜை செய்துக் கொண்டிருந்தார். மசூதியின் கடைசி கல் அகற்றப்படும்வரை அவர் பூஜையிலேயே அமர்ந்திருந்தார்.”

ஆனால், நரசிம்ம ராவ் பற்றிய ‘Half Lion’ என்ற புத்தகத்தை எழுதிய வினய் சீதாபதி, இந்த விவகாரத்தில் நரசிம்ம ராவுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று சான்றளிக்கிறார்.

ராவ் வீழவேண்டுமென்று விரும்பிய அமைச்சரவை

சீதாபதியின் கூற்றுப்படி, “1992 நவம்பர் மாதத்தில் இரண்டு பேரழிவுகளுக்கு திட்டமிடப்பட்டது. ஒன்று பாபர் மசூதி இடிப்பு, மற்றொன்று நரசிம்ம ராவின் வீழ்ச்சி”.

“பாபர் மசூதியை இடிக்க சங் பரிவாரமும், ராவை வீழ்த்த வேண்டுமென்று காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்த அவரின் எதிரிகளும் திட்டமிட்டார்கள்”.

“1992 நவம்பரில் ‘அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு’ (CCPA) குறைந்தது ஐந்து முறை கூடியபோதிலும், கல்யாண் சிங் நீக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் யாருமே கேட்கவில்லை.”

வினய் சீதாபதியுடன் ரெஹான் ஃபஜல்

சீதாபதி இதுகுறித்து மேலும் கூறுகிறார், “சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால்தான் ஒரு மாநில அரசை கலைக்கமுடியும் அல்லது சட்டம் ஒழுங்கு சீர்குலையப்போகிறது என்ற அறிகுறியாவது இருக்கவேண்டும் என்று பிரதமரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்”.

“அடுத்ததாக, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்ம ராவ் பூஜை செய்துக்கொண்டிருந்தார் என்று சொல்கிறாரே குல்தீப் நய்யார்? அவர் அப்போது நரசிம்ம ராவ் வீட்டில் பூஜையறையில் இருந்தாரா என்ன?” என்று கேள்விக்கணைகளை தொடுக்கிறார் சீதாபதி.

“இந்தத்தகவலை சமாஜ்வாதி தலைவர் மது லிம்யே சொன்னார் என்றும், அவருக்கு பிரதமர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவரிடம் இருந்து இந்தத் தகவல்கள் கிடைத்ததாகவும் குல்தீப் நய்யார் சொல்கிறார். இது உண்மையென்றால் தகவலை சொன்ன பிரதமர் அலுவலகத்தில் பணியாளரின் பெயரை அவர் ஏன் வெளிப்படையாக கூறவில்லை?”

“பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, நரசிம்ம ராவ் உறங்கிக் கொண்டிருந்தார், பூஜை செய்துக்கொண்டிருந்தார் என்று சொல்வதெல்லாம் ஆதாரமில்லாத கட்டுக்கதைகள்” என்கிறார் சீதாபதி.

சீதாபதியின் கருத்துக்கு வலு சேர்க்கும்விதமாக, பாபர் மசூதி இடிப்பின்போது, நிலவரத்தை நிமிடத்திற்கு நிமிடம் பிரதமரிடம் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்ததாக நரேஷ் சந்த்ரா மற்றும் உள்துறை அமைச்சக செயலர் மாதவ் கட்வாலே ஆகியோர் கூறுகின்றனர்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்

ராமஜென்ம பூமி என்ற அடையாளத்தை பா.ஜ.கவிடமிருந்து பறிக்க விரும்பினார் நரசிம்ம ராவ்

அரசியல் ஆய்வாளர் மற்றும் இந்திரா காந்தி கலை மையத்தின் தலைவர் ராம் பகதூர் ராயின் கருத்துப்படி, “1991 இல் பாபர் மசூதி என்ற ஆபத்து பூதகரமாக உருவெடுத்தபோது, அதை மட்டுப்பட்டுத்தவோ கட்டுப்படுத்தவோ நரசிம்ம ராவ் எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.”

“நரசிம்ம ராவ் பாபர் மசூதியை எப்படி வீழச்செய்தார்? என்று ராவின் பத்திரிகை ஆலோசகராக பதவி வகித்த பி.வி.ஆர்.கே பிரசாத் தனது ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அங்கு ஒரு கோவில் கட்டவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்த ராவ், ராமர் கோவில் அறக்கட்டளையை உருவாக்கினார்” என்கிறார் அவர்.

“மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நிகில் சக்ரவர்த்தி, பிரபாஷ் ஜோஷி மற்றும் ஆர்.கே மிஷ்ரா போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் நரசிம்ம ராவை சந்தித்தார்கள். நானும் அவர்களுடன் இருந்தேன். டிசம்பர் ஆறாம் தேதியன்று அந்த அசம்பாவித சம்பவத்தை ஏன் நிகழ்த்தவிட்டீர்கள் என்று பிரதமரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்”.

“அவர்களுடைய கேள்விக்கணைகளை அமைதியாக செவிமடுத்த நரசிம்ம ராவ், ‘எனக்கு அரசியல் தெரியாது என்று நினைக்கிறீர்களா?’ என ஒற்றை வரியில் பதிலளித்தார்”.

ராம் பகதூர் ராய் இவ்வாறு கூறுகிறார், “பாபர் மசூதி இடிந்துவிட்டால், ராமர் ஆலயம் என்ற பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் சதுரங்க விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும் என்று நரசிம்ம ராவ் கருதினார் என்று அவரது பதிலில் இருந்து நான் புரிந்துக் கொண்டேன். அதனால்தான் மசூதி இடிப்பதைத் தடுக்க முயற்சிகளை எடுக்காமல் கைகட்டி நின்றார் பிரதமர்”.

என்னுடைய கருத்தின்படி, “தவறான எண்ணத்தினாலோ, பாரதிய ஜனதா கட்சியினுடன் எதாவது சமரசத்தினாலோ அல்ல, ராமர் கோவில் என்ற முக்கியமான விஷயத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சியை விலக்கி வைக்கலாம் என்ற எண்ணத்துடன், கவனமாக அடிமேல் அடி வைத்து நரசிம்ம ராவ் இந்த விவகாரத்தில் செயல்பட்டார்.”

அரசியல் தப்புக்கணக்கு

நரசிம்ம ராவுடன் நெருக்கமாக இருந்த பத்திரிகையாளர் கல்யாணி சங்கரின் கருத்தின்படி, “பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் நரசிம்ம ராவின் செயல்பாடுகளின் உச்சபட்ச அரசியல் தப்புக்கணக்கு”.

சயீத் நக்வி மற்றும் ரெஹான் ஃபஜல்

“பாபர் மசூதி இடிப்பினால் பெரிய பிரச்சனை ஏதும் ஏற்படாது என்று அத்வானியும், வாஜ்பாயும் ராவுக்கு உறுதியளித்திருந்தார்கள்.”

”பாபர் மசூதியின் பொறுப்பை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிதர மறுத்துவிட்டது, அங்கு பாதுகாப்புப் படையை அனுப்பலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமை மாநிலத்திற்கே உண்டு. பாதுகாப்பு படையினரை பாபர் மசூதி இருக்கும் இடத்திற்கு அனுப்ப மாநில முதலமைச்சர் கல்யாண் சிங் ஒத்துக்கொள்ளவில்லை.”

நரசிம்ம ராவுடன் எஸ்.பி சவாண்

இந்த விஷயத்தில் நரசிம்ம ராவின் பங்கு ‘அரசியல் தப்புக்கணக்கா’ அல்லது கணிப்புப் பிழையா’ என்று பிரபல பத்திரிகையாளர் சயீத் நக்வியிடம் நான் கேட்டேன்.

அதற்கு நக்வியின் பதில் என்னை சிந்திக்க வைத்தது. “ராவுடன் சேர்த்து அவருடைய உள்துறை அமைச்சருக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டதா? சம்பவம் நடந்த தினத்தன்று மாலையில் மத்திய அரசின் உயரதிகாரிகள் நெற்றியில் பெரிய பொட்டுகளை இட்டுக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தார்களே, அவர்கள் மசூதியை இடித்துவிட்ட மகிழ்ச்சியில் வெற்றி திலகமிட்டுக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறதே, அதற்கு என்ன சொல்லி சமாளிக்கலாம்?”

குறைந்த அனுபவம் கொண்டவர்களுக்கே பொறுப்பு

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ‘The Turbulent Years’ என்ற சுயசரிதையில் இவ்வாறு எழுதியிருக்கிறார், “பாபர் மசூதி இடிப்பதை தடுக்கத் தவறியது பி.வி. நரசிம்ம ராவின் மிகப்பெரிய தோல்வி. மூத்தவரும், அனுபவம் வாய்ந்த தலைவருமான நாராயண் தத் திவாரியிடம் உத்தரபிரதேச மாநில அரசியல் விவகாரங்களை ஒப்படைத்திருக்க வேண்டும்”.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

”ஆனால் மாறிக் கொண்டிருந்த சூழ்நிலைகளை நரசிம்ம ராவால் கணிக்கமுடியவில்லை. ரங்கராஜன் குமாரமங்கலம் நேர்மையாக பணியாற்றினார் என்றாலும் இளைஞரான அவர், ஒப்பீட்டளவில் அனுபவமற்றவர்”.

கடுமையாக கடிந்த பிரணாப் முகர்ஜி

“பிறகு நரசிம்ம ராவை நான் தனிமையில் சந்தித்தேன். அப்போது அவரை நான் கடுமையாக பேசினேன். எதிர்வரும் பிரச்சனைகளைப் பற்றி கூற உங்களருகே யாருமே இல்லையா? பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் உலக அளவில் இருந்து எதிர்கொள்ளவேண்டிய விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டேன்.”

”குறைந்தபட்சம் இப்போதாவது முஸ்லிம்களின் காயங்களை உணர்ந்து, அவற்றை குறைக்க சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று நான் சொன்னபோது, நரசிம்ம ராவின் முகம் வழக்கத்தைப்போலவே உணர்ச்சியற்று இருந்தது.”

”ஆனால் பல தசாப்தங்களாக அவருடன் இணைந்து பணியாற்றிய எனக்கு அவரைப் பற்றி நன்றாக தெரியும். அவருடைய உணர்ச்சியற்ற முகத்தில் பொதிந்து கிடந்த அவரது துயரத்தையும் வருத்தத்தையும் என்னால் உணர முடிந்தது.” என குறிப்பிட்டுள்ளார் பிரணாப் முகர்ஜி.

அர்ஜுன் சிங் பங்கு பற்றிய கேள்வி

ஆனால் இந்த விவகாரத்தின் முழு அத்தியாயங்களிலும் அர்ஜுன் சிங்கின் பங்கு பற்றிய பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

அர்ஜுன் சிங்

மாகன்லால் ஃபோதேதாரின் சுயசரிதையில், “டிசம்பர் ஆறாம் தேதி பெரியளவில் பிரச்சனை வெடிக்கப்போகிறது என்று அர்ஜுன் சிங்குக்கு தெரிந்திருந்தது. அவர் தலைநகரில் இருந்து பஞ்சாபிற்கு சென்றுவிட்டார். பிறகு இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டதற்கு, தனது பயணம் முன்னரே திட்டமிடப்பட்டது என்று தெரிவித்தார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“1992, டிசம்பர் ஆறாம் தேதியன்று அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்காதது, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு காட்டிய தயக்கம் போன்றவற்றால், அவருக்கு அரசியல்ரீதியாக பின்னடைவு ஏற்பட்டது என்று நினைக்கிறேன். அவர் என்னிடம் நெருக்கமாக இருந்தவர், சவால்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை அவரிடம் இல்லை என்று எனக்குத் தெரியும்,” என்றும் அந்த நூல் கூறுகிறது.

“அர்ஜுன் சிங்கின் தவறான அணுகுமுறையும், மத்திய அமைச்சர்களின், குறிப்பாக வட மாநிலத் தலைவர்களின் மெளனமும் காங்கிரஸ் கட்சியை முஸ்லிம்களிடம் இருந்து மட்டுமல்ல, மத்திய அரசின் அதிகார மையத்தில் இருந்தும் எட்டு ஆண்டுகளுக்கு விலக்கி வைத்தது,” என்றும் ஃபொதேதார் தமது நூலில் குறிப்பிடுகிறார்.

*நன்றி : பிபிசி தமிழ்

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே