வ.உ.சிதம்பரனாரை ஒரு விடுதலைப் போராட்ட வீரராகவே அறிந்திருப்போம். தமிழறிஞர், தமிழ் இலக்கண இலக்கியத் துறையிலும் செயல்பட்டவர், எழுத்தாளர், கவிஞர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்ற அவருடைய பன்முக ஆளுமைக் குறித்து அறிந்திருப்பவர்கள் வெகு சிலரே.

உலகின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு உரை வரைந்த இளம்பூரணர், திருக்குறளுக்கு முதன்முதலில் ஒரு நல்லுரை தந்த மணக்குடவர் போன்ற உரையாசிரியர்கள் மீது வ.உ.சி.க்குப்பெரும் ஈடுபாடு இருந்தது.

அவருடைய கூர்த்த அறிவால் அந்த இலக்கண, இலக்கிய நூல்களைச் செம்மைப்படுத்திக் கிடைக்கப்பெற்றதே தொல்காப்பிய எழுத்ததிகாரம், பொருளதிகாரம் உரைகள், மணக்குடவரின் திருக்குறள் உரை ஆகியவையாகும்.

திருக்குறளில் அறத்துப் பாலை மணக் குடவர் உரையோடு செம்மைப்படுத்தி 1917இல் வெளியிட்டார். அவருடைய கையெழுத்துப் படிகளின் வழியாக அவர் மறைவிற்குப் பின்னர் பொருட்பால், காமத்துப்பால் உரையும் வெளியானது.

வ.உ.சியின் இலக்கண, இலக்கிய உரைகள் அவருடைய ஆழ்ந்த இலக்கண அறிவை வெளிப்படுத்துகின்றன. அவர் பொருள் கூறும் விதம், பல்வேறு உரைகளை ஒப்பிடும் விதம், அவர் தரும் இலக்கணக் குறிப்புகள் ஆகியவற்றின் மூலம் அவர் எவ்வளவு பெரிய மேதை என படிக்கும்போது அறிய முடிகிறது.

பன்முகத் தமிழ்ப் பணி:

ஏற்ற இறக்க வாழ்க்கைச் சூழலிலும் தமிழ் மொழிக்கு வ.உ.சி. ஆற்றியப் பணிகளில் குறைவில்லை. 1908இல் சிறைப்படுத்தப்பட்ட வ.உ.சி. செக்கிழுத்துப் பல துன்பங்களை எதிர்கொண் டார். அவர் வெளியே வந்தபோது அன்றைய அரசியல் உலகம் அவரைக் கண்டுகொள்ளவில்லை. வறுமை ஆட்கொண்டது.

சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் சில காலம் வணிகம் செய்தும், சில காலம் ஒரு நிறுவனத்திலும், சில காலம் கோவில்பட்டியில் வழக்குரைஞராகவும் பணியாற்றினார். வறுமையிலிருந்து மீளாதபோதும் பொது வாழ்வைத் தொய்வின்றித் தொடர்ந்தார். வ.உ.சி. நான்கு நூல்களை ஆங்கிலத்தி லிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அனைத்தும் ஜேம்ஸ் ஆலன் எழுதியவை, அறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவை.

‘விவேகபானு’, ‘இந்து நேசன்’, ‘தி நேஷனல்’ போன்ற பத்திரிக்கைகளுக்கு வ.உ.சி. ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இரத்தினக் கவிராயர் எழுதிய ‘இன்னிலை’ நூல், ‘சிவஞான போதம்’, ‘திருக்குறள்’ ஆகிய நூல்களுக்கு வ.உ.சி விளக்கவுரை எழுதியுள்ளார்.

அவர் இயற்றிய முதல் மூன்று நூல்களும் 1914-15ஆம் ஆண்டுகளில் எழுதப் பட்டவை. கண்ணனூர் சிறை யில் இருந்தபோது எழுதியவை ‘மெய்யறம்’, ‘மெய்யறிவு’. இவை திருக்குறளின்வழி வந்த நூல்கள் எனலாம். வெவ்வேறு காலத்தில் வ.உ.சி. எழுதிய பாடல்களின் தொகுப்பு ‘பாடல் திரட்டு’.

அவருடைய இறுதி நூல் வாழ்க்கை வரலாறு. 1916 முதல் 1930 வரை அவருடைய குடும்பம், இளைமைக் காலம், சட்டக் கல்வி, பொதுவாழ்க்கை, சிறைவாழ்க்கை என பல செய்திகள் இதில் அடங்கியுள்ளன. அவர் மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 1946இல் இது வெளியானது.

வாழ்வின் இறுதி நாட்களில், தன் வீட்டில் அன்றாட இலக்கியச் சொற்பொழிவு களுக்கு ஏற்பாடு செய்துவந்தார். ‘தூத்துக்குடி சைவசித்தாந்த சபை’ என்ற அமைப்பை நிறுவி கம்பன், திருக்குறள், சிவஞானபோதம் தொடர்பான சொற் பொழிவுகளை இலக்கிய அறிஞர்களை வரவழைத்து நடத்திவந்தார்.

பெரியார் நட்பு:

மொழிப்பற்று வழிதான் நாட்டுப்பற்று உருவாகும்; அதனால் காங்கிரஸ் தலைவர்களின் கூட்டங்களில் தமிழில் பேசவேண்டும் என வ.உ.சி. வேண்டுகோள் விடுத்தார்; காங்கிரஸ் மேடைகளிலும் அவ்வாறே பேசிவந்தார்.

வ.உ.சி.யின் வாழ்க்கையும் சமூக நோக்கமும் பெரியாரை பெரிதும் ஈர்த்திருக்கின்றன. ‘பெரியாரை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும்’ என்று நாகப்பட்டினத்தில் 1928 பேசிய வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் 1908 முதல் அறிமுகமும் நட்பும் இருப்பதை உணரமுடிகிறது.

”நாட்டின் விடுதலைக்காக குடும்பத்தோடு நாசமடைந்தவர் ஒருவர் உண்டென்றால் அவர் வ.உ.சிதம்பரனார் அவர்களேயாகும். வங்காளத்தில் ஏற்பட்ட சுதந்திர உணர்ச்சி இயக்கம் காரணமாக, நம் நாட்டிலும் துணி கொளுத்தப்பட்டது.

ஆனால் நமது வ.உ.சி. அவர்கள் இது மட்டும் போதாது என்று வெள்ளையர்களின் கப்பலுக்கு எதிராக கப்பலையும் கட்டி தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் பிரயாணக் கப்பலாக ஏற்பாடு செய்தார்” என்று பெரியார் பேசியுள்ளார்.

செல்வாக்காக இருந்த காலத்திலும் (1898-1907), வெஞ்சிறையில் வாடிய காலத்திலும் (1908-1912), எல்லாம் இழந்து வறுமையில் வாடிய காலத்திலும் (1913-1936) தமிழை மறவாது, இலக்கியத் தொண்டைத் தம் வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதி வாழ்ந்த வ.உ.சிதம்பரனாரின் தமிழ்த் தொண்டை மறவாதிருப்போம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே