சாதித்து காட்டிய இஸ்ரத் ரஷீத்

வாழ்க்கை யாருக்கு எப்போது எப்படியான சோதனைகளை வழங்கும் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. அதுதான் வாழ்க்கையின் இயல்பு.

அந்த ஈவு இரக்கமில்லாத இயல்புதான் ஒரு மனிதனின் உள்ளார்ந்த திறமைகளை பல நேரங்களில் வெளிக்கொண்டு வருகின்றன.

அந்த இயல்பை சோதனையாக பார்க்கும் மானுடம் தோல்வியை சந்திக்கிறது, சாதனைகளாக பார்க்கும் மானுடம் வெற்றியை சந்திக்கிறது.

அப்படியான மானுடத்தை சேர்ந்தவர் தான் காஷ்மீரின் இஸ்ரத் ரஷீத். யார் அந்த இஸ்ரத் ரஷீத்?? வாருங்கள் பார்க்கலாம்.

இஸ்ரத் ரஷீத்துக்கு வாழ்க்கை சுமுகமாக தான் போய்க் கொண்டிருந்தது. வழக்கமான காஷ்மீர் பெண்களைப் போல இவரும் தனக்கான பாதையில் சென்று கொண்டு இருந்தார்.

ஆனால் வாழ்வு அவருக்கு வேறு விதமான பாடத்தை எடுக்க நினைத்தது.

ஒரு அதிகாலைப் பொழுது தனது வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த இஸ்ரத் ரஷீத்துக்கு முதுகெலும்பு உடைந்தது. சற்றும் எதிர்பார்க்காத இந்த விபத்தால் இஸ்ரத் ரஷீத்தின் வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டது.

முதலில் இஸ்ரத் ரஷீத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் வாழ்க்கை அதுவரை அவருக்கு அப்படியான சோதனையை கொடுக்காதது தான்.

போதாக்குறைக்கு அவளது நிலைமையை பார்த்தவர்கள், நீ வீட்டில் இப்படி முடமாக இருப்பதற்கு விபத்தில் இறந்து போயிருக்கலாம் என்றும், உன் உறவினர்களாவது வறுமையில் இருந்து தப்பித்து இருப்பார்கள் என்றும் வார்த்தைகளின் மூலம் வன்மத்தை விதைத்தனர்.

சிறிது காலம் முடங்கியிருந்த இஸ்ரத் ரஷீத் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்தார்.

வாழ்க்கை எல்லோருக்கும் மறு வாய்ப்பு கொடுக்கும். அந்த வகையில் இஸ்ரத் ரஷீத்திற்கும் வாழ்க்கை தனது அடுத்த வாய்ப்பை வழங்கியது.

உடல் நிலையில் சிறிது தேறி இருந்த இஸ்ரத் ரஷீத்திற்கு, காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளரங்க மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கூடைப்பந்து வகுப்பு நடைபெறுகிறது என்ற செய்தி வந்தடைய, சக்கர நாற்காலி உதவியுடன் உடனே மைதானத்திற்கு புறப்பட்டார்.

அங்கு சக்கர நாற்காலியில் சிறுவர்கள் கூடைப்பந்தாடுவதை பார்த்த ரஷீத் இந்த சின்னஞ்சிறு பிஞ்சுகளாலே இவ்வளவு முடியுமென்றால் தன்னால் ஏன் முடியாது என்று கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொண்டார்.

தெளிவு பிறந்தது. நான் இதுவரை சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டத்தை விளையாடியது இல்லைதான்.

ஆனால் எனது முயற்சியின் மூலம் தேசிய அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்பேன் என்று தனக்குள் உறுதி கொண்டார்.

அந்த கணத்தில் இருந்தே தனது இலக்கை நோக்கிய பயணத்திற்கு ஆன படிக்கட்டுகளை தனது முயற்சிகளின் மூலம் கட்டமைத்தார். படிப்படியாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டார்.

காஷ்மீரில் 370ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு தகவல்கள் துண்டிக்கப்பட்ட தருணம். எந்த தகவலையும் பெற முடியாத நிலைமை.

இருப்பினும் சர்வதேச அளவில் நடக்கப்போகும் போட்டிக்கு இந்தியா சார்பில் ரஷீத் பங்கேற்க போகிறார் என்ற செய்தி ராணுவ வீரர்களின் மூலம் வந்து சேர்ந்தது.

இதற்காக ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். செய்தி ஆகஸ்டு 26-ஆம் தேதி வந்தடைகிறது.

உடனே புறப்பட்டார். பயிற்சியை நிறைவு செய்தார்.

தற்போது தாய்லாந்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்குபெற இருக்கிறார்.

தற்போது இவரின் உந்துதலால் காஷ்மீரில் உள்ள பல மாற்று திறனாளி பெண்கள் சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்று தங்களது வாழ்க்கை சக்கரத்தை சுழற்ற ஆரம்பித்துள்ளனர்.

இந்த சாதனையைப் பற்றி இஸ்ரத் ரஷீத் கூறும்போது, இதற்குப் பெரும் உதவியாக இருந்த தனது குடும்பம் மற்றும் இந்திய ராணுவத்திற்கு நன்றி என்றும், காஷ்மீரில் உள்ள பெண்கள் எப்போதும் தன்னை தாழ்வாகக் கருதாமல் வீட்டை விட்டு வெளியேறி சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் ஒரு சக்கர நாற்காலி வைத்துக்கொண்டு தன்னை இவ்வளவு சாதனைகளை நிகழ்த்த இயலும் போது, உங்களால் இதை விட பெரிய சாதனைகளை செய்ய முடியும் என்று போர்க்கள பூமியில் தன்னம்பிக்கை பூக்களை தூவி இருக்கிறார் இஸ்ரத் ரஷீத்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே