உலகமே அழிந்தாலும் கூட பிக் பாஸில் பங்கேற்க மாட்டேன்: வாரிசு நடிகர்.

உலகமே அழியப் போவதாக இருந்தாலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அத்யாயன் சுமன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கவிருக்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 14வது சீசன் செப்டம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 14வது சீசனில் நடிகர் சேகர் சுமனின் மகன் அத்யாயன், டிவி பிரபலங்கள் விவியன் டிசேனா, நியா சர்மா ஆகியோர் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் முன்பு இவர்கள் தான் போட்டியாளர்கள் என்று கூறி சிலரின் பெயர்கள் வெளியாவது வழக்கமாகிவிட்டது. அப்படித் தான் இந்த ஆண்டும் சில பெயர்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 14 போட்டியாளர்கள் பட்டியலில் தன் பெயரை பார்த்த அத்யாயன் சுமன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அத்யாயன் சுமன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக பொய்யான தகவல் வெளியாகியுள்ளது. கலர்ஸ்டிவி தயவு செய்து இதற்கு விளக்கம் அளிக்கவும் என்று தெரிவித்துள்ளார்.

அத்யாயன் சுமனின் ட்வீட்டை பார்த்த சமூக வலைதளவாசி ஒருவர் கமெண்ட்டில் தெரிவித்திருப்பதாவது,

தயவு செய்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம். பிக் பாஸ் வீட்டில் சின்ன விஷயங்களுக்காக நீங்கள் சண்டை போடுவதை பார்க்க விரும்பவில்லை. தயவு செய்து மரியாதையான வாழ்க்கையை வாழவும். உங்களை டிவி நிகழ்ச்சிகளில் அல்ல மாறாக படங்களில் பார்க்க விரும்புகிறேன். நன்றி என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு அத்யாயன் கூறியிருப்பதாவது,

இந்த உலகமே அழிவதாக இருந்தாலும் கூட நான் அங்கு போக மாட்டேன். கவலைப்பட வேண்டாம். அது என் கெரியர் கோல் கிடையாது என்றார்.

கடந்த 2008ம் ஆண்டு வெளியான ஹால் இ தில் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் அத்யாயன் சுமன். ராஸ் – தி மிஸ்டரி கன்டினியூஸ், ஜஷ்ன், ஹிம்மத்வாலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2016ம் ஆண்டு வெளியான இஷ்க் கிளிக் படத்திற்கு பிறகு அத்யாயனை எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் தான் அத்யாயன் சுமனின் பெயர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிபட்டது. 14வது சீசனில் 13 பிரபலங்கள், 3 சாதாரண ஆட்கள் கலந்து கொள்கிறார்களாம். கடந்த சீசனில் நடிகர் சித்தார்த் சுக்லா டைட்டிலை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் 14 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கான் வாரத்திற்கு ரூ. 16 கோடி சம்பளம் கேட்டதாக அண்மையில் செய்திகள் வெளியானது. ஒவ்வொரு ஆண்டும் சல்மான் கானின் சம்பளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆண்டுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை நிறுத்தப் போவதாக சல்மான் கான் ஒவ்வொரு சீசனிலும் கூறுகிறார். ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அதனாலேயே சல்மான் தான் வேண்டும் என்று ரசிகர்கள் அடம்பிடிக்கிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே