பொய் கூறி திருமணத்தை நிறுத்தினேன் – திருமணம் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்..!!

தன் காதலன் வருவார் ஒரு மணி நேரம் பொறுத்திருங்கள் என்று கூறி திருமணத்தை நிறுத்திய பெண், ‘காதலன் வருவார் என்று நான் சொன்னதெல்லாம் பொய்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ள மட்டக்கண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், மாப்பிள்ளை தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்தினார் பிரியதர்ஷினி. ‘தன் காதலன் இன்னும் ஒரு மணி நேரத்தில் வருவார், அதுவரை பொறுத்திருங்கள்’ என்று சொல்லி மணப்பந்தலில் இருந்து எழுந்தார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் எவ்வளவோ சொல்லியும், ‘தன் காதலன் ஒரு மணி நேரத்தில் வருவார்’ என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். 

இதில் ஆத்திரமடைந்த சிலர் பிரியதர்ஷினியை அடிக்கவும் முயன்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் மாப்பிள்ளை ஒரு பக்கம் தவித்துக்கொண்டிருக்க, ஒரு வழியாக பிரியதர்ஷினி எதிர்பார்த்தபடி திருமணம் நின்றது.

இந்த தகவல் மளமளவென சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியதும், ‘கடைசி நேரத்தில் இப்படி சொல்கிறாய். இப்போது பாதிக்கப்படுவது மாப்பிள்ளை தானே’ என்று பலரும் பிரியதர்ஷினியை திட்டி தீர்த்தனர்.

இதனையடுத்து பிரியதர்ஷினியின் காதலன் கடைசி வரைக்கும் மண்டபத்திற்கு வரவில்லை என்றும், பெற்றோர் அவரை வீட்டை விட்டுத் துரத்தியதாகவும், பிரியதர்ஷினி காதலனைத் தேடி சென்னைக்குச் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரியதர்ஷினி, ” நான் காதலன் வருவார் என்று சொன்னது பொய்.

எனக்குத் தாலிகட்ட இருந்த மாப்பிள்ளை குறித்துப் பல அபத்தமான தகவல் கிடைத்தது.

அதனாலேயே பொய் சொல்லி திருமணத்தை நிறுத்தினேன். நான் தற்போது என் பெற்றோருடன் வீட்டில்தான் இருக்கிறேன்” என்று கூறி பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே