எனது மகன் அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பம் இல்லை. காரணம் நான் 56 வருடங்கள் கஷ்டப்பட்டு உள்ளேன் என தெரிவித்தார்.
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகின நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அருகே உள்ள கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான திமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். அப்போது உங்களுடைய மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா..? என கேள்வி எழுப்பியபோது, எனது மகன் அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பம் இல்லை. காரணம் நான் 56 வருடங்கள் கஷ்டப்பட்டு உள்ளேன். 28 வருடங்கள் லட்சக்கணக்கான கிலோமீட்டர்கள் காரில் பயணம் செய்துள்ளேன். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடைபயணம், நூற்றுக்கணக்கான போராட்டங்கள் ஐந்து வருடங்கள் சிறை என வாழ்க்கையை நான் அழித்து கொண்டேன்.
எனது மகனும் கஷ்டப்பட வேண்டாம், அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என கூறினார். கட்சியில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வரும் 20ஆம் தேதி தெரியும். 20-ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் அப்போது பெரும்பான்மை என்ன முடிவு என்ன என்பது தெரியவரும் என தெரிவித்தார்.