முஸ்லிம் ஆக மாறியதால் 2006-ல் சாதனை படைத்தேன்: யூசுப் யுகானா, மொகமது யூசுப் ஆன கதை

2006-ல் எனது மிகப்பெரிய கிரிக்கெட் வெற்றி எல்லாம் வல்ல இறைவன் அல்லாவினால்தான் நடந்தது என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். இஸ்லாமிய மதத்தை தழுவியதால் என் வழியில் என் வெற்றியில் யாரும் குறுக்கிட முடியாது என்ற தன்னம்பிக்கையை அடைந்தேன் .

கிறித்துவ மதத்தைச் சேர்ந்த பாகிஸ்தானிய வீரர் யூசுப் யுகானா, முகமது யூசுப் என்று இஸ்லாமிய மதத்திற்கு 2005-ல் மாறினார். இதனையடுத்தே தான் 2006-ல் சாதனை வீரராகி விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை உடைத்ததாக மனம் திறந்துள்ளார்.

பாகிஸ்தானின் பல பிரமாதமான வீரர்களில் மொகமது யூசுப்பும் ஒருவர். சீராக ரன்களை எடுக்கக் கூடியவர், பிரமாதமான ஸ்டைல் உள்ள வீரர், சயீத் அன்வருக்குப் பிறகு பேட்டிங்கில் அழகும் அதிரடியும் சரிசம விகிதத்தில் கலந்த வீரர்.

இவர் 2005-ல் இஸ்லாமியத்துக்கு மாறுகிறார். 2006-ம் ஆண்டில் 11 டெஸ்ட் போட்டிகளில் 1,788 ரன்களை விளாசுகிறார். இதில் 9 சதங்கள் அடங்கும். ஒரு காலண்டர் ஆண்டில் மே.இ.தீவுகள் லெஜண்ட் விவ் ரிச்சர்ட்ஸ் எடுத்த ரன்கள் சாதனையையும் முறியடிக்கிறார் மொகமட் யூசுப் என்கிற யூசுப் யுஹானா. இந்த வெற்றிக்குக்காரணம் எல்லாம் வல்ல இறைவன் தன்னை இஸ்லாமியத்துக்கு மாற்றியதுதான் காரணம் என்று இன்று 46 வயதான மொகமட் யூசுப் நினைவுகூர்ந்துள்ளார்.

தன்னை யாரும் இஸ்லாமியத்துக்கு மாறித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை என்று கூறும் மொகமட் யூசுப், சயீத் அன்வரின் வாழ்க்கையே தன்னை இஸ்லாம் மார்க்கத்துக்கு மாற வைத்ததில் பெரும்பங்கு வகித்தது என்றார்.

சயீத் அன்வரின் மகள் சிறு வயதிலேயே இறந்து போனார், இது சயீத் அன்வரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அப்போது முதல் சயீத் அன்வர் சமூக சேவையில் ஈடுபடத் தொடங்கினார், கிரிக்கெட் பற்றி பேசுவதை தவிர்த்ததோடு, கிரிக்கெட் ஒரு பெரும் கவனச்சிதறல் என்று பேசத் தொடங்கினார், சச்சின் டெண்டுல்கர் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த போது மட்டுமே சயீத் அன்வர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்,

காரணம் அதுவரை சயீத் அன்வர் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் புரட்டி எடுத்த 196 ரன்கள்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனையாக இருந்தது.

இந்நிலையில் மொகமட் யூசுப் கூறியதாவது:

மற்றவர்கள் கூறுவது போல் நான் யாருடைய பலவந்தத்திலும் இஸ்லாம் மதத்தை தழுவவில்லை. உண்மை என்னவெனில் நான் சயீத் அன்வர் பாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன். எங்களது  பதின்ம பருவத்தில்  நாங்கள் நண்பர்களாக கிரிக்கெட் போட்டிகளில் சேர்ந்து ஆடி வந்தோம். சயீத் அன்வரின் பெற்றோர் என்னை அவர்கள்து இன்னொரு மகனாகவே கருதினர்.

அவர்கள் வீட்டில் நான் இருந்த போது மிகவும் அமைதியான, ஒழுக்கமான வாழ்க்கையை சயீத் அன்வர், பெற்றோர் வாழ்ந்ததை என்னால் நினைவு கூர முடிகிறது. சயீத் அன்வர் முழுதும் மதச் சேவைக்குத் திரும்பும் முன்னரே நான் அவரது வாழ்க்கையை நெருக்கமாக இருந்து பார்த்திருக்கிறேன். சயீத் அன்வரின் மகள் இறந்தது அவரை புரட்டிப்போட்டது, வாழ்க்கையின் அர்த்தம் இஸ்லாமிய மத சேவையில்தான், மக்கள் சேவையில்தான் என்பதை சயீத் அன்வர் புரிந்து கொண்டார்.

சயீதின் இந்த மாற்றம் எனக்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்த நான் இஸ்லாமியத்துக்கு மாறினேன்.  2005-ல் இஸ்மாமிய மதத்தை தழுவினேன், 2006-ல் எல்லாம் வல்ல அல்லா எனக்கு மிகப்பெரிய தொடரை பரிசாக அளித்தார். தாடி வளர்த்தேன், எனக்குள் அமைதி மார்க்கம் பிறந்தது. மனரீதியாக எந்த சவாலையும் சமாளிக்கத் தயாரானேன்.

2006-ல் எனது மிகப்பெரிய கிரிக்கெட் வெற்றி எல்லாம் வல்ல இறைவன் அல்லாவினால்தான் நடந்தது என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். இஸ்லாமிய மதத்தை தழுவியதால் என் வழியில் என் வெற்றியில் யாரும் குறுக்கிட முடியாது என்ற தன்னம்பிக்கையை அடைந்தேன்.

இவ்வாறு கூறினார் மொகமது யூசுப்பாக மாறிய கிறித்துவர் யூசுப் யுகானா.

யூசுப் 90 டெஸ்ட்களில் 7,530 ரன்களை எடுத்துள்ளார். 288 ஒருநாள் போட்டிகளில் 9,720 ரன்களை எடுத்துள்ளார். செப்.7, 2010-ல் பாகிஸ்தானுக்காக கடைசி சர்வதேச கிரிக்கெட்டை ஆடினார் மொகமட் யூசுப். மிகப்பிரமாதமான வீரர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே