வெள்ளை அறிக்கை வெளியிட நான் தயார்; கமல் தயாரா? – அமைச்சர் கடம்பூர் ராஜூ

எம்ஜிஆரை பழித்துப் பேசிய எவரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். அதேபோல், நடிகர் கமல்ஹாசன் தனது சொத்து மதிப்பை மறைக்காமல் வெளியிட்டால் தானும் வெள்ளை அறிக்கை தரத் தயார் என்றார்.

கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு நகர அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கடலைக்கார தெரு சந்திப்பு, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு ஆகிய இடங்களில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு அமைச்சர் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சந்திரசேகரன், தங்கமாரியம்மாள், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, துணை தலைவர் பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் விமலாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “எம்ஜிஆரை பழித்துப் பேசிய எவரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை.

எம்ஜிஆரை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். சீமான் போன்றவர்கள் எம்ஜிஆர் குறித்து பேச அருகதையில்லை.

பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை என்ன படித்திருக்கிறார் என்று தெரியவில்லை.

பொங்கல் பரிசு ரூ.2,500 அதிமுகவில் இருந்து வழங்குவதாகவா கூறினோம்?. அரசின் பொறுப்பில் இருந்து நலத்திட்ட உதவியை வழங்குகிறோம்.

அரசின் நிதியில் இருந்து வழங்குவதை தவறாக சித்தரிப்பவர், அவர் என்ன அளவுகோலில் பேசுகிறார் என்று தெரியவில்லை.

மக்களின் வரிப்பணம் மக்களுக்கே சென்று சேருவது தான் சிறந்த ஆட்சிக்கு அடையாளம். சிறந்த ஆட்சிக்கு அடையாளம் என்பதை நாங்கள் பலமுறை நிரூபித்துள்ளோம்.

இது சாதாரண பாமரருக்கு கூட தெரியும். அவர் எப்படி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படித்தார் என்று தெரியவில்லை.

கமல்ஹாசன் முதலில் நடித்த களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் இருந்து கடைசியாக நடித்த படம் வரை, மனசாட்சிப்படி அவர் என்ன ஊதியம் வாங்கினார் என்பதை வெளிப்படையாக கூறட்டும்; நாங்களும் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே