இலங்கையின் 23-வது பிரதமராக மஹிந்த ராஜபக்ச இன்று பதவி ஏற்கிறார்

இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச இன்று பதவியேற்க உள்ளார். இதன் மூலம் அதிபர், பிரதமர் என இரண்டு அதிகாரம் வாய்ந்த பதவிகளை ராஜபக்ச சகோதரர்கள் அலங்கரித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், இலங்கை பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை அதிபர் கோத்தபயவுக்கு அனுப்பினார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை இருந்தபோதும், மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து பதவி விலகுவதாக ரணில் விக்ரமசிங்க ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டார்.

இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக தனது மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சவை நியமித்து அதிபர் கோத்தபய உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கொழும்புவில் இன்று மதியம் நடைபெறும் விழாவில் இலங்கையின் 23-வது பிரதமராக மஹிந்த ராஜபக்ச இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார்.

அவருடன் 15 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு, அடுத்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி வரை பதவியில் இருக்கும் என தெரிகிறது.

அதற்கு பிறகு இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

74 வயதான மஹிந்த ராஜபக்ச, 2004-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2005ஆம் ஆண்டு நவம்பர் வரை பிரதமராக பதவி வகித்திருந்தார்.

2018ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த அரசியல் குழப்பங்களின்போது ராஜபக்சவை பிரதமராக அறிவித்தார், முன்னாள் அதிபர் சிறிசேன.

அதன் பிறகு அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்றார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 106 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் கொண்டுள்ளன.

பிரதமராக பதவியேற்கும் ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும், மற்ற இதர கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என கூறப்படுகிறது.

இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற போது, மகிந்த ராஜபக்ச அதிபராகவும், கோத்தபய பாதுகாப்புத்துறை செயலாளராகவும் பதவி வகித்தனர்.

அதே கூட்டணி தற்போது மீண்டும் இலங்கையின் அதிக அதிகாரம் வாய்ந்த அதிபர், பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளை கைப்பற்றியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே