நான் ஒரு தாய், மத்தவங்க மாதிரி ஏமாத்திக்கிட்டு தப்பு பண்ணல: வனிதா கண்ணீர்.

நான் மத்தவங்க மாதிரி யாரையும் ஏமாத்திக்கிட்டு தப்பு பண்ணவில்லை என்று வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தன்னை பற்றி யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட சூர்யா தேவி என்பவர் மீது வனிதா விஜயகுமார் துணை கமிஷனரை நேரில் சந்தித்து இன்று புகார் அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வனிதா கூறியதாவது,
கடந்த சில வாரங்களாக மீடியாவில் தேவையில்லாமல் பரபரப்பாக போய்க் கொண்டிருப்பது என் கல்யாணம் தான். சூர்யா தேவி தவறான யூடியூப் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அவர் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை ரொம்ப கேவலமாக பேசி, தப்புத் தப்பான தகவல்களை வெளியிட்டு மக்களிடம் என் இமேஜை கெடுத்து பெயர் வாங்கணும், பணம் சம்பாதிக்கணும்னு தப்பான வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

என் குடும்ப வழக்கறிஞர் பற்றியும் தவறாக பேசினார். எல்லை மீறி போனதால் தான் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளேன். ரவீந்திரன் என்று ஒரு பட தயாரிப்பாளர். அவர் தயாரிப்பாளராக பிரபலமானதை விட இந்த யூடியூபில் பலரை விமர்சித்து பிரபலமாகக் கூடிய ஒருவர். அவர் தேவையில்லாத வார்த்தைகளை எல்லாம் விட்டு ரொம்ப பர்சனலா போயிக்கிட்டிருந்தார். நான் அவரிடம் பர்சனலாக பேசியும், மீடியாவில் போய் திமிராக இன்னும் தப்புத் தப்பாக பேச ஆரம்பித்துவிட்டார்.

கொரோனாவால் போர் அடிக்கிறது, பப்ளிசிட்டி இல்லை, வேலை இல்லை என்பதற்காக என்னுடைய பெயர் பாப்புலராக இருக்குனு பேசுகிறார்கள். இந்த சூர்யா தேவி யார், அவரின் நோக்கம் என்னவென்று பல உண்மைகள் தெரிய வந்துள்ளது. ஒரு சில உண்மைகள் வெளியே வரும் வரைக்கும் மீடியா உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் மூன்று பிள்ளைகளின் தாய். நான் சிங்கிள் மதராக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். எனக்கு அம்மா, அப்பா, குடும்பத்தார் ஆதரவு இல்லை. அந்த ஒரே விஷயத்திற்காக யார், யாரோ என்னை பற்றி தப்பாக பேசுகிறார்கள். ரவீந்திரன் எல்லாம் சினிமா குடும்பத்தில் இருந்து கொண்டு ஒரு பெண்ணை இந்த அளவுக்கு அசிங்கமாக, கொச்சைப்படுத்துவது அவருக்கு சம்பந்தம் இல்லாத விஷயம். நான் அவரை பார்த்தது கூட இல்லை. பப்ளிசிட்டிக்காக அவர் பேசுகிறார்.

சூர்யா தேவிக்கும், ரவீந்திரனுக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து எல்லாம் பேட்டி கொடுக்கிறார்கள். என் பையன் மன அழுத்தத்தில் இருக்கிறான் என்றெல்லாம் சொல்லாதீங்க. என் குழந்தைகளை எந்த அளவுக்கு ஸ்டிராங்காக வளர்க்க முடியுமோ அந்த அளவுக்கு வளர்க்கிறேன். என் மகன் நிம்மதியாக இருக்கிறார். அவரை அவர் அப்பா நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார். அவங்கப்பா என்னுடன் டச்சில் தான் இருக்கிறார். எனக்கு 40 வயது ஆகிறது. எனக்கு ஒரு துணை வேண்டும் என்று நான் நேர்மையாக ஒரு முடிவு எடுத்தேன். நான் மத்தவங்கள மாதிரி ஏமாத்திக்கிட்டு தப்பு பண்ணல.
அதில் ஒரு சின்ன சிக்கல். அது பிரச்சனையே இல்லை. அதை வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள். இதுக்காக என் கேரக்டரை பற்றி தப்பாக பேசுவதும், என்னை ரொம்ப கீழ்த்தரமாக பேசுறதுமாக இருக்கிறார்கள். இதனால் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். வெளியே போகக் கூட பயமாக இருக்கு. தயவு செய்து உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில் தலையிடாதீங்க. இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே