நடிகை அனுஷ்கா இனி வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த அனுஷ்கா ஷெட்டி கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். அவர் கடைசியாக தமிழில் இஞ்சி இடுப்பழகி படத்தில் தான் நடித்திருந்தார். அந்த படத்தில் நடிப்பதற்காக அவர் உடல் எடையை அதிகம் கூட்டினார். ஆனால் அதற்குப் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் திணறிய அவர். இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதனால் தான் அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் என்றும் அப்போது இருந்து கூறப்பட்டு வருகிறது.
அந்த படத்திற்கு பிறகு சூர்யாவின் சி-3 படத்தில் மிக சிறிய நேரமே அவரது காட்சிகள் இருந்தது. அதன் பின் தெலுங்கில் அவர் நடித்த பாகுபலி 2, பாகமதி உள்ளிட்ட படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. மேலும் சென்ற வருடம் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் அனுஷ்கா நடித்திருந்தார்.
இந்நிலையில் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் என்ற படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அந்த படத்தில் அஞ்சலி, மாதவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என வதந்தி தொடர்ந்து பரவி வரும் நிலையில், படக்குழு அதனை மறுத்து உள்ளது. முதலில் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்றும், தொடர்ந்து தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தால் ஓடிடி ரிலீஸ் பற்றி பரிசீலிக்கப்படும் என அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் அனுஷ்கா தன்னுடைய கெரியர் பற்றியும் புது படங்கள் ஒப்புக்கொள்வது பற்றியும் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார் என தகவல் பரவி வருகிறது. இனி வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களுக்கு மேல் நடிக்க போவதில்லை என்று அவர் முடிவு எடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடிக்காமல், நடிக்கும் ஒரு சில படங்களில் மட்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த அவர் விரும்புகிறாராம். மேலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அவர் ஒப்புக் கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனக்கு மிகவும் நெருக்கமான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உடன் மட்டுமே பணியாற்றவும் அவர் விரும்புகிறார் என்றும் தகவல் தற்போது பரவி வருகிறது. இருப்பினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.
அனுஷ்கா அடுத்து கமல்ஹாசனின் ஜோடியாக வேட்டையாடு விளையாடு 2 படத்தில் நடிக்க உள்ளார் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே தகவல் பரவி வருகிறது. இந்த படத்தினை கௌதம் மேனன் இயக்க உள்ளார். இதற்கு முன்பு அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தை எடுக்க கௌதம் மேனன் திட்டமிட்டு உள்ளார் என செய்திகள் வந்தது. ஆனால் அந்த திட்டத்தை தற்போது அவர் கைவிட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு பதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க கௌதம் மேனன் கேட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது எனவும் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் படம் உறுதி ஆகும்.