FASTAG-ஐ உபயோகிக்கும் முறை….

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும்போது நேர விரயத்தை தடுக்க பாஸ்டேக் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி வாகனத்தின் முகப்பில் பார்கோடு அடங்கிய பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படவேண்டும்.

வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் தானாக கழியும் வகையில் நாடெங்கிலும் உள்ள சுங்கச்சாவடிகள் கணினியால் இணைக்கப்பட்டுள்ளன.

பாஸ்டேக் ஸ்டிக்கரை ஆக்டிவேட் செய்து தர 22 முக்கிய வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்த வங்கிகளுக்கு நேரடியாக சென்று ஸ்டிக்கரை வாங்கலாம்.

அதற்காக 100 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும். வங்கிக்கு வங்கி கட்டணம் சற்றே மாறுபடும்.

அத்துடன் திரும்பப் பெறக்கூடிய 100 அல்லது 200 ரூபாய் டெபாசிட் தொகையை செலுத்தவேண்டும்.

அதன்பின்னர் தொடர்ந்து நேரிலோ, ஆன்லைனிலோ “ரீசார்ஜ்” செய்துகொள்ளலாம். சில வங்கிகள் ரீசார்ஜை 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் தருகின்றன.

ஆன்லைனில் பாஸ்டேக் பெறவிரும்புவோர் MY FASTAG செயலியை கூகுள்பிளே ஸ்டோரிலும், ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோரிலும் டவுன்லோடு செய்யலாம்.

பின்னர் அதை விரும்பிய வங்கிக் கணக்குடனோ இணைத்துக் கொள்ளலாம்.

இல்லையேல் MY FASTAG செயலி வாயிலாக நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் NHAI வாலட் அல்லது Paytm பிரீ-பெய்டு திட்டத்திலும் இணைத்துக் கொள்ளலாம்.

பின்னர் தேவைப்படும் தொகையை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் லோடு செய்து கொள்ளலாம்.

மாதத்துக்கு அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே லோடு செய்யமுடியும்.

லாரி போன்ற வாகனங்கள் மாதத்துக்கு 1 லட்சம் ரூபாய் வரை லோட் செய்யலாம்.

கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்குச் சென்றும் பாஸ்டேகை பெற்று வங்கிக்கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம்.

சுங்கச்சாவடிகளை கடக்கையில் வங்கிக் கணக்கில் இருந்து உரிய தொகை தானாக கழியும். பாஸ்டேகை நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளிலேயே பெறும் வசதியும் உள்ளது.

அமேசான் போன்ற இ-வணிக நிறுவனங்களிலும் பாஸ்டேக் பெறலாம்.

பாஸ்டேக் பெறுவதற்கு வாகனத்தின் ஆர்.சி. புத்தக நகல், பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு உள்ளிட்ட இருப்பிடம் மற்றும் பான்கார்டு அடையாளச் சான்று நகல்கள், பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவை கட்டாயம்.

பாஸ்டேக் ஸ்டிக்கர் 5 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது.

பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்தவேண்டும்.

இத்திட்டத்தால் 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு தவிர்க்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே