மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் யெஸ் வங்கி பிரச்சனை – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

யெஸ் வங்கியை மீட்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி களமிறங்கி இருப்பது விநோதமான செயல் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோய்வாய்ப்பட்ட யெஸ் வங்கிக்கு உதவ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இதேபோல் ஐடிபிஐ வங்கியின் மீட்பு நடவடிக்கையில் எல்ஐசி தன்னார்வலராக இல்லாதது போல, யெஸ் வங்கி மீட்பு நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி ஒரு தன்னார்வலர் என்ற உணர்வு தனக்கு வரவில்லை எனவும்; இவை கட்டளை நிகழ்ச்சிகள் என்றே சந்தேகிக்க வழிவகுப்பதாக ப.சிதம்பரம் குறை கூறினார். 

யெஸ் வங்கிக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, மத்தியில் ஆளும் பாஜக அரசின் படுதோல்வி என குற்றம்சாட்டிய அவர், நாட்டின் நிதி நிறுவனங்களை பாஜக அரசு தவறாக நிர்வகிப்பதன் வெளிப்பாடு இது எனவும் விமர்சித்தார்.

எனினும், 49 சதவீத பங்குகளை வாங்கும் பாரத ஸ்டேட் வங்கி, யெஸ் வங்கி வழங்கிய வாரா கடன்களை விரைந்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே