மரடோனா தங்கியிருந்த அறையை அருங்காட்சியகமாக மாற்றிய ஓட்டல் நிர்வாகம்..!!

மறைந்த அர்ஜென்டினா கால்பந்து வீரரான மரடோனா கடந்த 2012-ம் ஆண்டு கேரளா வந்த போது கண்ணூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் தங்கி இருந்தார்.

கால்பந்து ஜாம்பவானான மரடோனாவிற்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில், வீட்டில் சிகிச்சையில் இருந்த மரடோனாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தார்.

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மரடோனா, நான்கு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவரது மறைவு கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபரில் மரடோனா கேரள மாநிலத்திற்கு வருகை தந்திருந்தார். 

அப்போது கண்ணூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அவர் தங்கியிருந்தார்.

இந்நிலையில் மரடோனாவின் நினைவைப் போற்றும் வகையில் அவர் தங்கியிருந்த அறை எண் 309 மரடோனா சூட் என பெயரிடப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

“அக்டோபர் 23, 2012 அன்று மரடோனா கண்ணூருக்கு வந்தபோது, ​2 நாட்கள் ​அவர் அறை எண் 309 இல் தங்கியிருந்தார்.

இங்கு அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளது” என தனியார் விடுதியின் நிர்வாக இயக்குனர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் புகைபிடித்த சுருட்டு, செய்தித்தாள், தேநீர் கோப்பைகள், படுக்கை விரிப்பு, ஒரு ரசிகர் அவருக்கு அளித்த ஓவியம் மற்றும் அவர் பயன்படுத்திய சோப்பு ஆகியவை அவரது நினைவாக அறையில் வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக அவரது மறைவையொட்டி கேரள விளையாட்டுத் துறையின் சார்பில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராமன் அறிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே