2 ஆயுர்வேத நிறுவனங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!!

எதிர்காலத் தேவைக்கு 2 ஆயுர்வேத மையங்களை, 5வது ஆயுர்வேத தினமான இன்று , பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இவை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்(ஐடிஆர்ஏ), ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத மையம்(என்ஐஏ) ஆகியவையாகும். 

இரண்டும், நாட்டின் முன்னணி ஆயுர்வேத மையங்கள். ஐடிஆர்ஏ-வுக்கு நாடாளுமன்ற சட்டம் மூலம் தேசிய முக்கியத்துவ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

என்ஐஏ-வுக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வழங்கியுள்ளது.

ஆயுஷ் அமைச்சகம், கடந்த 2016ம் ஆண்டிலிருந்து தன்வந்தரி பிறந்த தினத்தில் ஆயுர்வேத தினத்தை கடைபிடித்து வருகிறது.

இந்தாண்டு நவம்பர் 13ம் தேதி ஆயுர்வேத தினம் வருகிறது.தற்போதுள்ள கோவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு, 5வது ஆயுர்வேத தினம், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் மெய்நிகர் முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி ஐடிஆர்ஏ, ஜாம்நகர் மற்றும் என்ஐஏ, ஜெய்ப்பூர் ஆகிய இரண்டு ஆயுர்வேத மையங்களையும் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஐடிஆர்ஏ, ஜாம்நகர் : இது  நாடாளுமன்ற சட்டம் மூலம் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த மையம் உலகத்தரம் வாய்ந்த சுகாதார நிறுவனமாக உருவாகவுள்ளது.

ஐடிஆர்ஏ மையத்தில் 12 துறைகள், 3 பரிசோதனைக் கூடங்கள் மற்றும் 3 ஆராய்ச்சிக் கூடங்கள்  உள்ளன. பாரம்பரிய மருந்து ஆராய்ச்சியில் இது முன்னணி நிறுவனம். இங்கு தற்போது 33 ஆராய்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜாம்நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த நான்கு ஆயுர்வேத மையங்களின் தொகுப்பை இணைத்து ஐடிஆர்ஏ உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆயர்வேத துறையில் தேசிய முக்கியத்துவ அந்தஸ்து பெற்ற முதல் மையம் ஆகும். 

இந்த தரம் உயர்த்தலின் மூலம், ஆயுர்வேத கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் ஐடிஆர்ஏவுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும்.

நவீன சர்வதேச தரத்துக்கு ஏற்ற வகையில் இது ஆயுர்வேதக் கல்வியை அளிக்கும். மேலும், இது, ஆயுர்வேதத்துக்கு சமகால உந்துதலை அளிக்க, ஆயுர்வேத மையங்களுக்கு இடையே ஒழுங்குமுறை ஒத்துழைப்பை உருவாக்கும்.

என்ஐஏ, ஜெய்ப்பூர்: நாட்டின் புகழ்பெற்ற ஆயுர்வேத மையமான என்ஐஏவுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.  175 ஆண்டு பாரம்பரியத்தின் வாரிசாக, கடந்த சில தசாப்தங்களாக ஆயுர்வேதத்தைப் பாதுகாக்கவும், முன்னேற்றவும், என்ஐஏ-வின் பங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது, என்ஐஏ மையத்தில் 14 துறைகள் உள்ளன. இந்த மையத்தில் ஆசிரியர்-மாணவர் விகிதம் நன்றாக உள்ளது. 2019-20ம் ஆண்டில் 955 மாணவர்களும், 75 பேராசிரியர்களும் உள்ளனர். ஆயுர்வேதாவில் சான்றிதழ் படிப்பு முதல் டாக்டர் பட்டப்படிப்பு வரை இந்த மையம் கற்பிக்கிறது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வுக் கூடங்கள் இங்கு உள்ளன.

ஆராய்ச்சி நடவடிக்கையில் என்ஐஏ முன்னணி நிறுவனமாக உள்ளது.  தற்போது, இது 54 ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கப்பட்டதன் மூலம், இந்த தேசிய மையம், சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சியில் புதிய உச்சத்தைத் தொடவுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே