இந்தியா விடுதலை அடைந்த பிறகு தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் நடந்த முதல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தபோதும் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது எப்படி?

இந்தியா விடுதலை அடைந்த பிறகு, முதலாவது பொதுத் தேர்தல் நவம்பர் 1951 முதல் மார்ச் 1952வரை நடைபெற்றது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தலும் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக நடைபெற்றது.

அந்தத் தருணத்தில் சென்னை மாகாணம் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் – கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், கேரளாவின் மலபார் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.

ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 309ஆக இருந்தது.

இதில் இரட்டை உறுப்பினர் தொகுதிகளின் எண்ணிக்கை 66. ஆகவே மொத்தமாக 375 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.

(பட்டியலின வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் பொது உறுப்பினர், பட்டியலின உறுப்பினர் என இரண்டு உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இந்தத் தொகுதிகளே இரட்டை உறுப்பினர் தொகுதி என அழைக்கப்பட்டன. 1957ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு, பட்டியலின வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடும் வகையில் தனித் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன).

இந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பகுதியில் 190 உறுப்பினர்களும் ஆந்திரப் பிரதேச பகுதியில் 143 பேரும் கர்நாடகப் பகுதியில் 11 பேரும் கேரளப் பகுதியில் 29 பேரும் இடம்பெற்றிருந்தனர்.

மொத்தமுள்ள 375 தொகுதிகளில் மூன்று தொகுதிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். மீதமுள்ள 372 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

சென்னை மாகாணத்தில் அப்போது நடந்துவந்த காங்கிரஸ் ஆட்சியில் பல பிரச்சனைகள் இருந்தாலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே வலுவான கட்சியாக காணப்பட்டது.

இதற்கு அடுத்த இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது.

துவக்கத்தில் ஆயுதப் புரட்சியில் நம்பிக்கை வைத்திருந்த கட்சி, தற்போது தேர்தல் அரசியலை நோக்கித் திரும்பியிருந்தது.

இந்த இரண்டு பிரதான கட்சிகள் தவிர, த. பிரகாசம் தலைமையில் கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி, க்ருஷிகார் லோக் கட்சி, விழுப்புரம் ராமசாமி படையாட்சியார் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, எம்.ஏ. மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி, பி.டி. ராஜன் தலைமையில் நீதிக் கட்சி, பொதுவுடமைக் கட்சி, சென்னை மாநில முஸ்லீம் லீக், ஃபார்வர்ட் பிளாக், தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இருந்தன.

முதல் சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி உட்கட்சிப் பூசலில் தவித்துக்கொண்டிருந்தது.

1946லிருந்து 1951க்குள் மூன்று முதல்வர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தனர். முதலில் த. பிரகாசம் ஓராண்டு முதல்வராக இருந்தார். பிறகு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார்.

பிறகு, பி.எஸ். குமாரசாமி ராஜா முதல்வரானார். அதிருப்தியில் இருந்த த. பிரகாசத்தின் ஆதரவாளர்கள் 1951ல் கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சியின் சேர்ந்துகொண்டனர்.

த. பிரகாசம்
படக்குறிப்பு,த. பிரகாசம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் ஆதரவளிக்க முன்வந்தது.

அப்போதுதான் உருவாகியிருந்த சி.என். அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், தங்கள் கொள்கைகளை ஏற்கும் பிற கட்சிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்தது. ஆனால், தங்களுடைய மூன்று கொள்கைகளை ஆதரிப்பதாக உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமெனக் கூறியது.

அதன்படி தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் காமன்வீல் கட்சியும் நிபந்தனைப் படிவத்தில் கையெழுத்திட்டு, ஆதரவைப் பெற்றன.

சில கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கும் தி.மு.க. ஆதரவளித்தது. அதன்படி, 43 வேட்பாளர்களுக்கு தி.மு.க. ஆதரவளித்தது.

மொத்தமுள்ள 375 இடங்களில், 367 இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 131 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது.

மற்ற கட்சிகள் தாங்கள் செல்வாக்காக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தின.

இந்தத் தேர்தலில் முக்கியப் பிரச்சனையாக, அரிசிக்குத் தட்டுப்பாடு, விவசாயிகள் போராட்டம் ஆகியவை இருந்தன. இவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாகவும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான போக்காகவும் பார்க்கப்பட்டன.

ஆனால், இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்ற பிம்பம் காங்கிரசிற்கு உதவிகரமாக இருந்தது.

அண்ணா தலைமையிலான திமுக இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. பெரியார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார்.
படக்குறிப்பு,அண்ணா தலைமையிலான திமுக இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. பெரியார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார்.

நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டால் நாடே சிதறுண்டுபோகுமென பிரசாரம் செய்தது காங்கிரஸ்.

அரிசித் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்றவற்றை முன்னிறுத்தி பிரசாரம் செய்தன கம்யூனிஸ்ட் கட்சிகள். தி.மு.க. காங்கிரசிற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டது.

இந்தத் தேர்தலில் 21 வயது நிரம்பிய எந்தவொரு ஆணும் பெண்ணும் வாக்களிக்க முடியும் என புதிய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறியது.

ஆகவே இந்தத் தேர்தல்தான் பலருக்கும் முதல் தேர்தலாக இருந்தது.

அந்த காலகட்டத்தில் பலரும் கல்வியறிவு குறைவானவர்களாக இருந்த நிலையில், அப்போதைய இந்தியத் தேர்தல் ஆணையரான சுகுமார் சென், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னத்தை ஒதுக்கீடு செய்தார்.

வாக்குச் சாவடியில், ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும், வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய கட்சிக்கான பெட்டியில் தங்கள் வாக்குகளைச் செலுத்த வேண்டும்.

இந்தியா முழுவதும் நடந்த இந்தத் தேர்தலுக்காக 24,73,850 பெட்டிகள் செய்யப்பட்டன.

8,200 டன் இரும்பு இதற்காக பயன்படுத்தப்பட்டது. வாக்களித்தவரே திரும்பவும் வாக்களித்துவிடாமல் இருக்க, கையில் மை வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 1952 ஜனவரி 2ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை ஒன்பது கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 58 சதவீத வாக்குகள் பதிவாகின. முடிவுகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் வெளியாகின.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 367 இடங்களில் போட்டியிட்ட அந்தக் கட்சி 152 இடங்களை மட்டுமே பிடித்திருந்தது.

ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதோடு, முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் தோல்வியடைந்திருந்தார்.

முந்தைய அமைச்சரவையில் இருந்த இரண்டு அமைச்சர்கள் மட்டுமே வெற்றிபெற்றிருந்தனர். எம். பக்தவத்சலமும் தோல்வியடைந்திருந்தார்.

இதனால், காங்கிரஸ் ஆட்சியமைக்க அவசரம் காட்டவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கிஸான் மஸ்தூர் கட்சி, கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்த சுயேச்சைகள், தமிழ்நாடு தொழிலாளர் கட்சி, காமன்வீல் கட்சி, நீதிக் கட்சி ஆகியவை த. பிரகாசம் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் இணைந்தனர்.

தங்களுக்கு 166 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமெனக் கோரினார். ஆனால், ஆளுநர் ஸ்ரீ பிரகாசா இதற்கு மறுத்துவிட்டார்.

சி. ராஜகோபாலச்சாரி
படக்குறிப்பு,சி. ராஜகோபாலச்சாரி

இதற்குப் பிறகு, 1952 ஏப்ரல் ஒன்றாம் தேதி காங்கிரசிற்கு அழைப்பு விடுத்தார் ஆளுனர். பெரும்பான்மை இல்லாத நிலையில், அரசை வழிநடத்திச் செல்ல சரியான முதலமைச்சரைத் தேடத்தொடங்கியது அக்கட்சி.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் பதவிவகித்து ஓய்வுபெற்றுவிட்டு, குற்றாலத்தில் தங்கியிருந்த சி. ராஜகோபாலச்சாரி என்ற ராஜாஜியை முதல்வராக்க முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. ராஜாஜி தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை. புதிதாக போட்டியிடவும் விரும்பவில்லை.

இதனால், அப்போதைய குமாரசாமி ராஜா அரசு ராஜாஜியை மேலவை உறுப்பினராக நியமனம் செய்தது. இது அந்த நேரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருந்தபோதும் உடனடியாக பெரும்பான்மை உறுப்பினர்களைத் திரட்டும் பணியைத் துவங்கினார் ராஜாஜி. எம்.ஏ. மாணிக்கவேல் நாயகரின் காமன்வீல் கட்சிக்கு ஆறு உறுப்பினர்கள் இருந்தனர்.

இந்தக் கட்சி, காங்கிரசில் இணைக்கப்பட்டது. மேலும் சில சுயேச்சைகளும் வந்துசேரவே, காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தது.

எம்.ஏ. மாணிக்கவேல் நாயகர் அமைச்சராக்கப்பட்டார். ராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ராஜாஜி அரசுக்கு ஆதரவளித்தது.

க்ருஷிகார் லோக் கட்சி உடைந்தது. அதன் உறுப்பினர்களான பி. திம்மா ரெட்டி, நிலாத்திரி ராவ் ரெட்டி, குமிசெட்டி வெங்கட் நாராயணா ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர்.

சென்னை மாகாண முஸ்லீம் லீக் கட்சியும் ராஜாஜிக்கு ஆதரவளித்தது.

ஜூலை மாதம் மூன்றாம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 200 உறுப்பினர்கள் ஆதரித்தும் 151 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.

ராஜாஜி தலைமையில் அமைந்த தமிழ்நாட்டின் முதல் அமைச்சரவையில் சி. ராஜகோபாலச்சாரியார், ஏ.பி. செட்டி, சி. சுப்ரமணியம், கே. வெங்கடசாமி நாயுடு, என். ரங்கா ரெட்டி, எம்.வி. கிருஷ்ணாராவ், வி.சி. பழனிச்சாமி கவுண்டர், யு. கிருஷ்ணாராவ், ஆர். நாகன கவுடா, என். சங்கரரெட்டி, எம்.ஏ. மாணிக்கவேலு நாயகர், கே.பி. குட்டி கிருஷ்ணன் நாயர், சண்முக ராஜேஸ்வர சேதுபதி, எஸ்.பி.பி. பட்டாபி ராமாராவ், டி. சஞ்சீவய்யா ஆகிய அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்.

1953ஆம் ஆண்டில், ஆந்திர மாநிலம் பிரிந்ததையடுத்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பதவியிலிருந்து விலகினர். புதிதாக பக்தவத்சலம், ஜோதி வெங்கடாசலம், கே. ராஜாராம் நாயுடு ஆகியோர் அமைச்சரானார்கள். தமிழக சட்டப்பேரவையின் பலம் 231ஆகக் குறைந்தது.

ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடுத்து, ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலக, புதிய முதலமைச்சராக 1954ல் காமராஜர் பதவியேற்றார். இந்த அமைச்சரவை 1957ல் நடந்த அடுத்த தேர்தல் வரை பதவியில் இருந்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே