மழையில் நெல்மூட்டைகள் நனைவதை தடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

அரசு கொள்முதல் நிலையங்கள் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையில் அரசு கொள்முதல் நிலையங்கள் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் நனைந்து வீணானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மழை நீரில் நனைந்து நெல் வீணாவதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம், காய வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட நெல் மழையில் நனைந்துள்ளது. இதுததொடர்பான முழு விவரங்களை கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனக்கூறி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே