10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்காமல் ‘தேர்ச்சி’ சான்றிதழ் மட்டும் வழங்க முடிவு..!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன.

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்ய தனியாக குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மதிப்பெண் வழங்கும் முறையை இன்னும் அறிவிக்கவில்லை.

குறிப்பாக, 10ம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பு சேருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், மதிப்பெண் வழங்கும் முறை குறித்து இன்னும் முடிவெடுக்கப்படாமல் இருப்பது மாணவர்களை அதிருப்தி அடையச் செய்தது. கடந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு எந்த தேர்வுகளும் நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

9ம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்ணை கணக்கிடலாம் என்றாலும் தனியார் பள்ளிகளில் அதற்கான கோப்புகள் இல்லாததால் அதிலும் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களை குறிப்பிடாமல் “தேர்ச்சி” என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால் பாட வாரியாக “தேர்ச்சி” என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே