சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்..!!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” நேற்று கொரோனா தடுப்பூசி மொத்தமாக 3825 பேர் செலுத்தினார்கள்.

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் ஆகியோர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

நான் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர் என்ற முறையில் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன்.

தமிழகம் முழுவதும் 166 கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்தவர்கள் படிப்படியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வார்கள். 

16 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு தயாராக இருந்தும், இறுதி நேரத்தில் பயம் காரணமாக பலரும் அதனை தவிர்த்துள்ளனர்.

விரைவில் அவர்களும் வந்து தடுப்பூசியை எடுத்துக்கொள்வார்கள்.

மதுரை அரசு மருத்துவமனையில் 111 பேர் அதிகபட்சமாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

சென்னை ஸ்டாண்லி அரசு மருத்துவமனையில் 100 பேர் அதிகபட்சமாக செலுத்திக்கொண்டனர். படிப்படியாக முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

தடுப்பூசி செலுத்த வந்தாலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, சானிடைசரால் கைகளை உபயோகம் செய்தல் போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசி இரண்டுமே பாதுகாப்பானவை தான். எந்த விதமான பயமும் வேண்டாம். தமிழகத்தில் யாருக்கும் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படவில்லை ” என்று தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே