தனக்கு கிடைத்த தொடர் நாயகன் விருதை நடராஜனிடம் கொடுத்த ஹர்திக் பாண்டியாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 -1 என்ற வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி வாகை சூடியுள்ளது.

இந்த வெற்றிக்கு இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் அனைவரது பங்களிப்பும் இருந்தாலும் பாண்ட்யா, ஜடேஜா, சாஹல், கோலி மற்றும் தமிழக வீரர் ‘யார்க்கர்’ நடராஜனின் அசத்தலான ஆட்டமும் முக்கிய காரணம்.

மூன்றாவது போட்டியை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா இழந்த நிலையில் போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கொடுக்கப்பட்ட டி20 தொடருக்கான கோப்பையை கேப்டன் கோலி அறிமுக வீரராக களம் இறங்கி அசத்திய நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தார்.

பின்னர் இந்திய அணி கோப்பையுடன் போட்டோ எடுத்துக் கொண்டது.

அப்போதும் கோப்பை நடராஜன் கையில்தான் இருந்தது.

டி20 தொடரில் நடராஜன் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இந்திய அணி 17 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா வென்றிருந்தார்.

இந்த தொடரின் தொடர் நாயகனாக நடராஜனே தேர்வு செய்யப்பட வேண்டும் என பெரும்பாலான ரசிகர்கள் விரும்பிய நிலையில், ஹர்திக் பாண்டியா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டது பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்தநிலையில், டி.20 தொடருக்கான கோப்பையை பெற்று கொண்ட இந்திய கேப்டன் கோலி அதை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்க, ஹர்திக் பாண்டியாவோ தனது கையில் வைத்திருந்த தொடர் நாயகனுக்கான விருதை நடராஜனிடம் கொடுத்து அவரை பெருமைப்படுத்தியுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே