பெரியார் சிலை அவமதிப்பு: தலைவர்கள் கண்டனம்

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட நிகழ்விற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் காவி பெயிண்ட்டை ஊற்றி சென்றுள்ளனர்.

இதனை காலை 5.30 மணியளவில் கண்ட பெரியார் அமைப்பினர் மற்றும் திமுகவினர் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து வந்த குனியமுத்தூர் காவலர்கள் தண்ணீர் ஊற்றி பெயிண்டுகளை அகற்றினர்.

தகவல் அறிந்து திமுக மற்றும் திராவிடர் கழகத்தினர் மற்றும் பெரியார் அமைப்பினர் அந்த பகுதியில் குவிந்து வருவதால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெரியார் சிலை மீது பெயிண்ட்டை ஊற்றிச் சென்ற மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி திமுக, மற்றும் பெரியார் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட நிகழ்விற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: கோவை மாவட்டம், சுந்தராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி சென்றுள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்.

இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளன என்கிற செய்தி கேட்டு துடிதுடித்துப்போனேன்.

நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாக சதிகாரர்கள் கொடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த அநியாயச் செயலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே