அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை திறப்பு விழா புதன்கிழமை காலை நடந்தது.

அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன் ஆகியோர் சிலையை திறந்துவைத்து மரியாதை செலுத்தினர்.

எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்ரமணி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இல்லை.

விருப்பமுள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம். இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை பெற்று முதல்வர் அறிவிப்பார்.

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதி செய்து கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது. 9 ஆம் வகுப்பு வரையிலும் 50 சதவீத பாடம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 65 சதவீதம் அளவுக்கு பாடம் நடத்தப்படும் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே