GWM நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து. பின்னணி காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்

இந்திய – சீன எல்லையில் ஜூன் 16ம் தேதியில் இருந்து பதற்றம் அதிகரித்துள்ளது. அன்று மதியம் ”இந்திய – சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு” என்ற செய்தி வெளிவந்தது.

இந்த செய்தி வெளிவந்த சில நிமிடங்களில், ”சீன மோட்டார் நிறுவனமான ஜி.டபிள்யூ.எம் மற்றும் மகாராஷ்டிர அரசாங்கத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது; 3000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க 100 கோடி டாலர்கள் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது,” என்ற அறிவிப்பும் வெளியானது.

அடுத்த சில மணி நேரத்திற்கு பிறகு இந்திய-சீன எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியும் வெளிவந்தது. இதனால் இந்தியாவில் சீனா மீதான கோபம் அதிகரித்தது.

இந்நிலையில் ஜூன் 15ம் தேதி சீன நிறுவனத்துடன், மகாராஷ்டிரா அரசாங்கத்தின் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்.

படத்தின் காப்புரிமை GWM

ஆனால், இந்த ஒப்பந்தம் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிரா மாநில தொழிற்துறை இணை அமைச்சர் அதிதி தட்கரே தெரிவித்துள்ளார்.

மாநில அரசும் மத்திய அரசும் இணைந்தே இந்த முடிவுக்கு வந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

“கிரேட் வால்ஸ் மோட்டர்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வேலைவாய்ப்புகளை பெருக்கியிருக்கும். ஆனால், தற்போதைய எல்லையில் நிலவும் பதற்றநிலை காரணமாக இந்த ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இத்தகைய முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து என்ன நிலை எடுக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பும்,” என்று அவர் பிபிசி மராத்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

ஜி.டபிள்யூ.எம் நிறுவனம்: பின்னணி என்ன ?

படத்தின் காப்புரிமை HANDOUT PHOTO

ஜி.டபிள்யூ.எம் – கிரேட் வால் மோட்டர்ஸ் என்ற நிறுவனம் 1984ல் நிறுவப்பட்டது. 2003ம் ஆண்டு ஹாங்காங் பங்கு சந்தையில் இந்த நிறுவனம் பதிவு செய்துகொண்டு, தனது பங்குகளை விற்க துவங்கியது.

கடந்த பிப்ரவரி மாதம் கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தது. இந்தியாவில் நடைபெற்ற ”பின்னாலே டெல்லி ஆட்டோ எக்ஸ்போ” என்ற வர்த்தக நிகழ்வில் ஜி.டபிள்யூ.எம் நிறுவனம் தனது மின்சார கார்களை முதல் முறையாக காட்சிப்படுத்தியது.

”பின்னாலே டெல்லி ஆட்டோ எக்ஸ்போ” நடைபெற்றபோது சீனா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பிபிசி மராத்தியிடம் பேசுகையில் புனேவின் தலேகோன் நகரத்தில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையை தாங்கள் கையகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

அமெரிக்க மோட்டார் நிறுவனமான செவ்ரோலே நிறுவனம் 2017ம் ஆண்டு இந்திய சந்தையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது. அதன் பிறகு குஜராத்தின் ஹலோலில் உள்ள செவ்ரோலே நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை சீன நிறுவனத்தின் எம்.ஜி மோட்டார்ஸ் கையகப்படுத்தியது.

தற்போது இதே தொழிற்சாலையில் படிப்படியாக 100 கோடி டாலர்களை முதலீடு செய்து அதிக தொழில்நுட்ப திறன்கொண்ட ரோபோக்களின் உதவியுடன் ஜி.டபிள்யு.எம் நிறுவனம் இந்தியாவில் இருந்து வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்தது. இந்தியாவின் பெங்களூரை தவிர ஜி.டபிள்யு.எம் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்கள் ஏழு வளரும் நாடுகளில் உள்ளன. மேலும் உலகளவில் 14 உற்பத்தி தொழிற்சாலைகளையும் ஜி.டபிள்யு.எம் நிறுவனம் கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசாங்கத்துடனான ஒப்பந்தம்

”மேக்னெட்டிக் மகாராஷ்டிரா” திட்டத்தின் கீழ் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ”புதிய துவக்கம்” என மகாராஷ்டிரா மாநில முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER

இந்த தொழிற்சாலைக்காக 40,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநிலத்தின் தொழிற்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தால் மகாராஷ்டிராவிற்கும், தங்கள் நிறுவனத்திற்கும் நல்ல தொழில் முறை நன்மைகள் கிட்டும் என ஜி.டபிள்யு.எம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் 2042 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி.டபிள்யு.எம் புனேவில் 3770 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. மகாராஷ்டிர தொழிற்சாலையில் உருவாக்கப்படவுள்ள வாகனங்களை இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜி.டபிள்யு.எம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை HANDOUT PHOTO

இந்தியா முழுவதும் சீனாவுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவிய பிறகு பல உலக நாடுகள் சீனாவுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றன. இந்தியாவில் சீனா தயாரிப்புகளை ஒழிக்க வேண்டும், டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்திய-சீன எல்லையில் நிலவிய பதற்றம் மோதலாக மாறியது. இரண்டு நாடுகளிலும் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர் என்று செய்தி வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல இந்தியர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ஜி.டபிள்யு.எம் நிறுவனத்தின் ஒப்பந்தம் குறித்த செய்தியும் இன்னும் சில சீன நிறுவனங்கள் இந்தியாவில் மேலும் பல ஒப்பந்தங்களை கையெழுத்திடவுள்ளன என்பன போன்ற செய்திகளும் வெளிவருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ரயில் பாதை கட்டுவதற்காக ஒரு பெரிய சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது என செய்தி வெளிவந்தது.

1126 கோடி ரூபாய் செலவில் டெல்லி மற்றும் மீரட் இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கவுள்ளது. இந்த ஒப்பந்தம் ஷாங்காய் டனல் இன்ஜினியரிங் கம்பெனி என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதே ஒப்பந்தத்தை பெறுவதற்கு டாட்டா, மற்றும் எல்&டி போன்ற இந்திய நிறுவனங்களும் போட்டியிட்டன, ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க மறுத்ததால் ஆர்.எஸ்.எஸ் யின் இணை நிறுவனமான சுவதேசி ஜகரன் மன்ச் கண்டனம் தெரிவித்தது.

Related Tags :

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே