சமூக வலைதளங்களில் வெறுப்புகளைத்தான் காண முடிகிறது!’ -ரத்தன் டாடா வேதனை

ரத்தன் டாடா, `நாம் போட்டி போட்டுகொண்டு ஒருவரை ஒருவர் கீழே இழுக்கும் தருணம் இதுவல்ல என்றும் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் ஒன்றுபட்டு நிற்போம்’ என்கிறார்.

`நம் வாழ்வுடன் இணக்கமாக உள்ள சமூக வலைதளங்கள் பெரும்பாலும் எதிர்மறையான கருத்துகளையே நம்முள் விதைப்பதாகத் தெரிகிறது. கேலிகளும் கிண்டல்களுமே நகைச்சுவை போர்வையில் நடமாடிக்கொண்டிருக்கின்றன. இன்றைய ஆன்லைன் சமூகத்தின் இந்த அவலநிலை குறித்து மிக உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார் டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா’

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நம் சமூகத்தின் நிலை குறித்து வருத்தத்துடன் அவர் போட்டிருந்த பதிவில், “இந்த ஆண்டு நம் அனைவருக்குமே சவால்கள் நிறைந்த ஆண்டாக உள்ளது. சமூக வலைதளங்களை நான் பார்க்கும்போது பெரும்பாலும் அதில் சண்டை சச்சரவுகளும் வெறுப்புகளுமே காணப்படுவதை நம்மால் பார்க்க முடிகின்றது” எனக் கூறியுள்ளார். மேலும், நாம் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் கீழே இழுக்கும் தருணம் இதுவல்ல என்றும் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் ஒன்றுபட்டு நிற்போம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்துக்காக 1,500 கோடி ரூபாய் அவர் நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 82 வயதாகும் அவர் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர், “நாம் அனைவரும் இன்னும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டும் சண்டைகள் இல்லாமல் அன்பை பரிமாறிக்கொள்பவர்களாக இருக்க வேண்டும். இன்று நாம் இருப்பதைவிட பல மடங்கு பொறுமைசாலிகளாக இருக்க வேண்டியது அவசியம்” எனக் கூறியுள்ளார்.

பதிவின் முடிவாக, “நான் சமூக வலைதளங்களில் செலவழிக்கும் நேரம் குறைவானதே, ஒருவரை வெறுக்கவும் ஒருவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசவும் நம் காரணங்கள் எதுவாயினும் வரும் காலங்களில் சமூக வலைதளங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஆதரவளிக்கும் இடமாக உருவாகும் என நம்புகிறேன்” என டாடா தெரிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே