சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து சென்ற விவகாரம்… ஸ்டாலின் உள்பட 21எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!!

சட்டப்பேரவைக்கு குட்காவை கொண்டு சென்றதாக திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கைக்கு தடைக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பேரவைக்கு அனுமதி இல்லாமல் குட்காவை கொண்டு வந்ததாக ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்கள் தாராளமாக தமிழகத்தில் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தி.மு.க.வினர் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர்.

இதையடுத்து தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்து, அந்த நோட்டீசுக்கு தடை பெற்றனர். பின்னர் இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வாதத்தில், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் தி.மு.க மீது மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் எளிதில் தாராளமாக கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே தி.மு.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் கொண்டு சென்றதாக வாதிடப்பட்டது. அதனை தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே