காவலர் தேர்வு : 1,000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு – காரணம்?

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து காவலர் தேர்விலும் ஆயிரம் பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

8,888 பணியிடங்களுக்கான தேர்வை சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுதினர்.

இதில் தேர்ச்சி பெற்ற 47 ஆயிரம் பேருக்கு, உடற்தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அதிலிருந்து 8,800 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர்.

இந்த ஆய்வின்போது, விளையாட்டு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆயிரம் பேரின் சான்றிதழ்கள் தகுதியற்றவை என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் சமர்ப்பித்த விளையாட்டு சான்றிதழ்கள், தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகாரம் இல்லாதவர்களிடம் பெறப்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். மேலும் போலி விளையாட்டு சான்றிதழ் அளித்தவர்களிடம் விளக்கம் கேட்டு அதிகாரிகள் மின்னஞ்சல் அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு ஒதுக்கீட்டில் சான்றிதழ் அளித்த ஆயிரம் பேரில், 200 பேர் எழுத்துத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதால் அவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும், மீதமுள்ள 800 பேருக்கு பணி மறுக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே