மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மீண்டும் ஆளு‌நர் உத்த‌ரவு..

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவில்லையெனில் ஆட்சியை தொடர்வதற்கான பெரும்பான்மை இல்லையென்றே கருதப்படும் என்று ஆளுநர் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநில காங்கிரசின் முக்கிய தலைவராக திகழ்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இதையடுத்து சிந்தியாவின் ஆதரவு மாநில அமைச்சர்கள் 6 பேர் உள்ளிட்ட 22 எம்எல்ஏக்கள், பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் முகாமிட்டனர்.

மேலும் 22 பேரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தனர்.

அதில், சிந்தியா ஆதரவு அமைச்சர்கள் 6 பேரின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.

இதையடுத்து 6 பேரின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டதால், அவர்கள் எம்எல்ஏ பதவியையும் இழந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் கமல்நாத் சட்டப்பேரவையில் நேற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜெய்ப்பூரில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களும், ஹரியானாவில் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்களும் மத்திய பிரதேசம் திரும்பினர்.

இதனிடையே முதலமைச்சர் கமல்நாத், ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெங்களூருவில் சில எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ள நிலையில், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது ஜனநாயக விரோதமானது எனத் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சிறப்பு பேருந்து மூலம் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கொரோனா அச்சம் காரணமாக, முகக்கவசம் அணிந்து அவைக்கு வந்தனர்.

இந்நிலையில் அவைக்கு வந்த ஆளுநர் லால்ஜி டாண்டன், அனைவரும் ஜனநாயகப்பூர்மாக சட்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தை எழுப்பி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கொரோனா தாக்கம் காரணமாக அவை நடவடிக்கைகளை வரும் 26 ஆம் தேதிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சிவ்ராஜ் சிங் சவ்கான், பெரும்பான்மை இல்லை என்பதை அறிந்துள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை முதலமைச்சர் கமல்நாத் தவிர்ப்பதாக குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து சவ்கான் தலைமையில் ஆளுநர் மாளிகைக்கு சென்ற பாஜகவின் எம்எல்ஏக்களும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

பெரும்பான்மையை இழந்து விட்ட காங்கிரஸ், ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை இழந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், 48 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிவ்ராஜ் சிங் சவ்கான் மனு தாக்கல் செய்தார்.

அவருடன் மேலும் 9 பாஜக எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

இதனிடையே இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத்துக்கு ஆளுநர் மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே