கொரோனா அச்சத்தால் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திமுக பொதுக்குழுக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 29-ல் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வகையில் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரைமுருகன் அறிவித்தார்.

பொருளாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 29ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுக்குழு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள கழக நிகழ்ச்சிகள் மார்ச் 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே