100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘வாத்தி கம்மிங்’ – ட்விட்டரை தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

மாஸ்டர் படம் வெளியான பிறகு ’வாத்தி கம்மிங்’ பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது.

மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ பாடல் யூ-ட்யூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால், ‘மாஸ்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் வசூலிலும் முன்னணி இடத்தைப் பெற்றது.

அதோடு ‘குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். சமீபத்தில் நடிகை ஜெனிலியா, தனது கையில் ஏற்பட்ட காயத்துடன் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். சோனி டிவி-யில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில், நடன கலைஞர் ஒருவர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார். அப்போது ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட நடுவர்களும் ஆடினார்கள்.

இதற்கிடையே மாஸ்டர் படம் வெளியான பிறகு ’வாத்தி கம்மிங்’ பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது யூ-ட்யூபில் இந்தப் பாடல் பாடல் வீடியோ 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக #VaathiComingHits100MViews என்ற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டனர். இது ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே