தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தயங்கும் தேர்தல் பணி அலுவலர்கள்

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கும் நிலையில், தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள தேர்தல் பணி அலுவலர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அடுத்த மாதம் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான முதல் கட்டப் பயிற்சி இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அவ்வாறு வந்தவர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம், கோளாறு ஏற்பட்டால் எவ்வாறு சரிசெய்வது, வாக்குப்பதிவின்போது வாக்காளர்களிடமும், அரசியல் கட்சி முகவர்களிடமும் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பன குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.

அந்த வகையில் விருத்தாச்சலம் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் 1664 அலுவலர்கள் பங்கேற்றிருந்தனர். பயிற்சி நடைபெறும் வளாகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு, தேர்தல் பணி அலுவலர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

நேற்று வந்திருந்த தேர்தல் பணி அலுவலர்களின் 127 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஏனையோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டினர். தயக்கத்திற்கான காரணம் குறித்துக் கேட்டபோது, தடுப்பூசி போட்டுக் கொண்டால் காய்ச்சல், மயக்கம் வரும் என்பதாலும் பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து தடுப்பூசி மையத்தில் இருப்பவர்களிடம் விசாரித்தபோது, தடுப்பூசி போட்டுக் கொண்டால் சிலருக்கு மட்டும் காய்ச்சல் வர வாய்ப்புண்டு, அது உடனே சரியாகிவிடும். எனவே அச்சப்பட வேண்டாம். முதல் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டபின் 28 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே