இந்தியாவின் அசிங்கமான மொழியாக கன்னடத்தை காட்டிய கூகுள்..!!

கூகுள் தேடுதளத்தில் இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடா என்று காண்பித்ததால் ட்விட்டரில் கன்னடர்கள் கொந்தளித்துவருகின்றனர்.

இந்தியா ஒரே நாடாக இருந்தாலும் பல்வேறு மொழிவழி தேசிய இனங்களைக் கொண்ட இனக்குழு அடங்கிய கூட்டமைப்புதான் இந்தியா நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் இந்தியா சுதந்திரத்துக்குப் பிறகு செயல்பட்டுவருகிறது.

இந்திய நிலப்பரப்பில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், 22 மொழிகள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருந்துவருகின்றன.

இந்தியாவுக்கு என்று தேசிய மொழிகள் கிடையாது. ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய வரலாற்று பெருமையைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மொழியைச் சேர்ந்த மக்களும் தங்கள் மொழி மீது அளப்பறிய பற்றைக் கொண்டுள்ளனர். சாதி, மதம் என்ற பிரிவினைக் கடந்து, மொழி குறித்து அவதூறு எழும்போது ஒன்றாக கிளர்ந்தெழுவதைப் பார்க்க முடியும்.

உலக அளவில் தகவல்களைக் கொட்டித்தரும் தேடுதளமாக கூகுள் இருந்துவருகிறது. ஒருவர் எந்த ஒரு விஷயம் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும் என்றாலும் கூகுளில் சென்று தேடும்போது அதற்கு தொடர்புடைய தரவுகளைப் பெற முடியும். தற்போதைய நவீன டிஜிட்டல் உலகில் கூகுள் இன்றி அணுவும் அசையாது என்ற சூழல் உள்ளது. ஆனால், அந்த கூகுளில் சில நேரத்தில் எதேனும் தவறான அல்லது அவதூறான வார்த்தைகள் குறித்து தேடும்போது சம்மந்தம் இல்லாத ஒன்றைக் காட்டும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.

2018-ம் ஆண்டில் கூகுளில் இடியட் என்று ஆங்கிலத்தில் தேடும்போது அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் படங்களை காட்டியது. அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை விளக்கம் அளிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதோபோன்றதொரு நெருக்கடியான சூழலை கூகுள் தற்போதும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தியாவின் அசிங்கமான மொழி எது? என்று கூகுளில் தேடும் போது கூகுள் கன்னடம் என்று பதிலைக் காட்டியுள்ளது. அதனால், ட்விட்டரில் கன்னடர்கள் கொதித்துள்ளனர். கூகுள் எப்படி எங்கள் மொழியை அசிங்கமான மொழி என்று வகைப்படுத்தலாம் என்று கண்டனங்களை எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் உடனடியாக மன்னிப்பு கோரவேண்டும் என்று கன்னட நெட்டீசன்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதேநேரத்தில், உலக மொழிகளின் ராணி என்ற கேள்விக்கும் கன்னடாவைக் கூகுள் காண்பித்துள்ளது. தற்போது, மேற்கூறிய தவறை கூகுள் நிறுவனம் திருத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே